அதிமுகவை அழிக்க நினைக்கும் திமுகவுடன் இணைந்து ஆட்சி அமைப்பதை என் மனம் ஏற்க மறுத்ததால், தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) ஆதரவளிக்கும் நோக்கில் எனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளேன் என்று மதுராந்தகம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தனது இந்த திடீர் முடிவு குறித்து, மரகதம் குமரவேல் வெளியிட்டுள்ள விரிவான அறிக்கையில், திமுகவுடன் இணைந்து ஆட்சி அமைப்போம் என்ற தற்போதைய அரசியல் சூழல் மற்றும் கருத்துக்களை எனது மனம் எவ்வகையிலும் ஏற்க மறுத்துவிட்டது. பிரதான கட்சியான அதிமுகவை அரசியல் ரீதியாக அழிக்க நினைக்கும் ஒரு கட்சியுடன் கைகோர்ப்பதை விட, மாற்று சக்தியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) ஆதரவு அளிப்பதே சிறந்தது என்ற முடிவுக்கு வந்தேன்.
மேலும் தொடர்ந்து தனது தொகுதி மக்களின் நலன் குறித்துப் பேசிய அவர், “எனது மதுராந்தகம் தொகுதிக்குத் தேவையான அடிப்படை வசதிகள், கட்டமைப்பு மேம்பாடுகள் மற்றும் மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை முழுமையாகப் பெற்றுத் தர வேண்டும் என்ற உன்னத நோக்கில் மட்டுமே இந்த முடிவை எடுத்துள்ளேன். தவெக-வுக்கு ஆதரவளிப்பதன் மூலமே மதுராந்தகம் தொகுதிக்குத் தேவையான அனைத்து நன்மைகளையும் விரைவாகச் செய்ய முடியும் என்று நம்புகிறேன். அதன் காரணமாகவே எனது எம்.எல்.ஏ பதவியை முழு மனதுடன் ராஜினாமா செய்துள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
