திபெத்திய பௌத்த மதத்தின் மிக உயர்ந்த ஆன்மீகத் தலைவரான 14-வது தலாய் லாமாவின் வாரிசு தேர்வு என்பது தங்களின் உள்நாட்டு விவகாரம் என்றும், இதில் இந்தியா தலையிடக்கூடாது என்றும் சீனா எச்சரித்துள்ளது. இதுகுறித்து இந்தியாவிற்கான சீன தூதர் யூ ஜிங் கூறுகையில், தலாய் லாமாவின் மறுபிறவி என்பது பல நூற்றாண்டுகளாக சீனாவின் மத்திய அரசின் ஒப்புதலைப் பெறும் மதச் சடங்குகளின் படியே நடக்கிறது என்றார்.

இந்த விவகாரத்தில் இந்தியா தலையிட்டால் இருநாட்டு உறவுகளும் சீர்குலைந்து, அது ஒரு “முள்வேலிப் பிரச்சினையாக” மாறும் என்றும், ‘திபெத்திய சுதந்திரத்தை’ ஆதரிக்கும் நடவடிக்கைகளுக்கு இந்தியா இடம் தராது என நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால், கடந்த ஆண்டு தனது 90-வது பிறந்தநாளில் பேசிய தலாய் லாமா டென்சின் கியாட்சோ, அடுத்த தலாய் லாமாவை அடையாளம் காணும் முழு அதிகாரம் தனது அறக்கட்டளைக்கு மட்டுமே உள்ளது எனத் தெளிவுபடுத்தியிருந்தார்.

திபெத்திய மொழியில் ‘தலாய் லாமா’ என்றால் “ஞானக் கடல்” என்று பொருள். இவர்களின் நம்பிக்கைப் படி, ஒரு தலாய் லாமா மறைந்த பிறகு அவரது ஆன்மா மற்றொரு குழந்தையாக மறுபிறவி எடுக்கும். 1935-ல் பிறந்த தற்போதைய தலாய் லாமா, 1959-ல் திபெத்தை சீனா ஆக்கிரமித்த போது இந்தியாவிற்கு வந்து தஞ்சமடைந்தார். தற்போது இமாச்சலப் பிரதேசத்தின் தர்மசாலா பகுதியில் வசித்துக் கொண்டே திபெத்திய அரசை வழிநடத்தி வருகிறார்.

இந்த நிலையில், அடுத்த ஆன்மீகத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதில் தங்களுக்கே முழு அதிகாரம் இருப்பதாகச் சீனா உரிமை கொண்டாடுவது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.