சென்னை எழும்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், தமிழகத்தில் நடந்துள்ள இரண்டு முக்கிய சம்பவங்கள் தன் மனதை உலுக்கியுள்ளதாகக் கூறினார். முதலாவதாக, திருச்சி அரசு மருத்துவமனையில் செவிலியர் மாணவி ஒருவர் தவறான சிகிச்சையால் உயிரிழந்த சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றார்.
அரசு மருத்துவமனைகள் எப்போதுமே ஏழை எளிய மக்களின் நம்பிக்கைக்குரிய இடமாக இருக்க வேண்டும் என்றும், தவறு செய்தவர்கள் மீது அரசு போர்க்கால அடிப்படையில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். அதைவிடப் பெரிய கொடுமையாகக் கோவையில் 10 வயது சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டு மரணமடைந்த சம்பவத்தைச் சுட்டிக்காட்டிய தமிழிசை, தமிழகத்தில் மனிதர்களுக்கு மத்தியில் மிருகங்கள் உலா வருவதாகக் வேதனை தெரிவித்தார்.
தவெக அரசு கொண்டு வந்த ‘சிங்கப்பெண்கள் படை’ வளர்ந்து வரும் பெண் பிள்ளைகளைக் காப்பாற்றத் தவிப்பதாகக் குறிப்பிட்ட அவர், முதலமைச்சர் விஜய் இந்த விவகாரத்தில் உடனே தலையிட்டுத் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
மேலும், பெண் பிள்ளைகளைப் பெற்ற தாயார்கள் தங்களது பிள்ளைகளைக் கண்டிப்பதை விட, எப்போதும் கண்காணிப்புடன் வளர்த்துப் பாதுகாப்பான சூழலை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
