தமிழகத்தில் புதிய அரசியல் சூழல் உருவாகியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்த விவகாரம், திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளிடையே கடுமையான வார்த்தை மோதலாக வெடித்துள்ளது. உதயநிதி ஸ்டாலினின் விமர்சனத்திற்கு காங்கிரஸ் எம்பி சசிகாந்த் செந்தில் தற்போது அதிரடி பதிலடி கொடுத்துள்ளார்.
அதாவது நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக்கழகத்திற்கு ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை கிடைக்காத நிலையில், திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சி தவெக-வுக்கு ஆதரவு அளித்தது. இதனையடுத்து, தவெக அமைத்துள்ள புதிய அமைச்சரவையில் காங்கிரசுக்கு 2 அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டன. இதுமட்டுமல்லாமல், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) ஆகியவற்றுக்கும் தலா ஒரு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
திமுக கூட்டணியில் இருந்து திடீரென விலகி தவெக-வுடன் கைகோர்த்த காங்கிரஸை திமுகவினர் மிகக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். திமுக இளைஞரணி கூட்டத்தில், “நம்பியவர்களுக்கு எல்லாம் துரோகம் இழைக்கும், முதுகில் குத்திய காங்கிரஸ்” என்று அதிகாரப்பூர்வமாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதோடு இக்கூட்டத்தில் பேசிய இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், “இந்திய அளவில் பாஜகவின் வெற்றிக்கு காங்கிரஸ் கட்சிதான் முக்கியக் காரணம்” என்று குற்றம் சாட்டினார்.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் எம்பி சசிகாந்த் செந்தில் விடுத்துள்ள அறிக்கையில் திமுகவை கடுமையாகச் சாடியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது, தேர்தல் தோல்விக்குப் பிறகு என்ன பேசுவது என்று தெரியாமல், அராஜகமான வார்த்தைகளால் தங்களது முன்னாள் கூட்டணிக் கட்சிகளைத் தாக்குவது அரசியல் நாகரிகம் அல்ல. மக்களுக்காக, மக்களால் உருவாக்கப்பட்ட சித்தாந்த அரசியல் இயக்கமான காங்கிரஸ் கட்சியை விமர்சிப்பதற்கு, குறைந்தபட்ச அரசியல் அனுபவமாவது அவசியம். வெறும் கைதட்டலுக்காகப் பேசப்படும் வார்த்தைகள் சில நிமிடங்கள் மட்டுமே நீடிக்கும் என்று அவர் மிகவும் ஆக்ரோஷமாகப் பதிலடி கொடுத்துள்ளார்.
