இந்தியக் குடும்பங்களுக்குள் நடக்கும் தனிமனித சுதந்திரம் மற்றும் வளர்ப்பு முறை குறித்த பெரிய விவாதத்தை ஒரு வைரல் வீடியோ சமூக வலைதளங்களில் கிளப்பியுள்ளது. வைரலாகி வரும் அந்த வீடியோவில், ஒரு சிறுமி இயர்போன் மாட்டிக்கொண்டு படித்துக் கொண்டிருக்கிறார். அப்போது வீட்டிற்கு வந்த தாய், தான் கூப்பிட்டும் மகள் கேட்கவில்லை என்ற ஆத்திரத்தில் அவளது இயர்போனை பிடுங்கி, கன்னத்தில் பளார் என அறைகிறார். இதனை அந்த சிறுமியின் தம்பி சமாதானம் செய்யாமல், மொபைலில் வீடியோ எடுத்துக் கொண்டே தன் அக்காவை கேள்வி கேட்பது நெட்டிசன்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

​”நான் இயர்போன் மாட்டிக்கொண்டு படித்துக் கொண்டுதான் இருந்தேன்” என அந்தப் பெண் புத்தகங்களைக் காட்டி கதறியும், அந்தத் தாயும் தம்பியும் அவளை டார்ச்சர் செய்துள்ளனர். ஒருகட்டத்தில் சமையல் செய்யாததை சுட்டிக்காட்டி, “நாளைக்கு உன் புகுந்த வீட்டில் என்ன பண்ணுவாய்?” எனத் தாய் கேட்க, “உனக்கு என்ன நடக்குதோ, அதான் எனக்கும் நடக்கும்” என அந்த மகள் பதிலடி கொடுத்துள்ளார்.

இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், “பிள்ளைகளுக்கு என்று சுயமரியாதை, தனி உரிமை உள்ளது, அதை பெற்றோர்கள் மதிக்க வேண்டும்” என்றும், “குடும்ப சண்டையை வீடியோ எடுத்து சோசியல் மீடியாவில் போடும் தம்பியை முதலில் உதைக்க வேண்டும்” என்றும், “பிள்ளைகள் பெற்றோரின் பேச்சுக்குக் கட்டுப்பட்டு வீட்டு வேலைகளையும் செய்ய வேண்டும்” என்றும் இரு தரப்பாகப் பிரிந்து கடுமையான விவாதங்களை முன்வைத்து வருகின்றனர்.