அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சீனாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, அவருடன் உலகின் முன்னணிப் பணக்காரரான எலான் மஸ்க்கும் சென்றிருந்தார். அப்போது பெய்ஜிங்கில் சீன கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அளிக்கப்பட்ட விருந்து ஒன்றில், எலான் மஸ்க்கிற்குப் பின்னால் நின்ற ஒரு பெண் பணியாளர் தற்போது உலக அளவில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளார். அவர் சாதாரண ஹோட்டல் ஊழியர் கிடையாது என்றும், சீன ராணுவத்தின் முக்கிய பட்டாலியன் கமாண்டரான மேஜர் செங் செங் என்றும் இணையத்தில் பல ஊகங்கள் எழுந்துள்ளன.

இந்த மேஜர் செங் செங், சீன ராணுவத்தின் செயல்பாட்டு கையேடுகள் மற்றும் நடைமுறைகளை எழுதுவதில் மிக முக்கியப் பங்கு வகித்தவர் என்று கூறப்படுகிறது. ராணுவ சீருடையில் இருக்கும் மேஜர் செங் செங்கின் பழைய புகைப்படங்களையும், தற்போது விருந்தில் பணிப்பெண் உடையில் இருக்கும் புகைப்படங்களையும் ஒப்பிட்டுப் பார்த்துப் பலரும் இந்தச் சந்தேகத்தைக் கிளப்பியுள்ளனர்.

மேற்கத்திய நாடுகளின் அரசியல் தலைவர்கள் மற்றும் பெரிய தொழிலதிபர்களைத் தங்களது வலைக்குள் வீழ்த்த சீனா இதுபோன்ற உளவு உத்திகளைக் கையாள்வதாகக் கருதப்படுகிறது. இதற்கு முன்பும் ‘பாங் பாங்’ என்ற சீனப் பெண் மூலம், கலிபோர்னியாவைச் சேர்ந்த முக்கிய அரசியல்வாதிகளிடம் இருந்து ரகசியத் தகவல்களைப் பெற சீனா ‘ஹனி டிராப்’ செய்ததாகக் குற்றச்சாட்டுகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.