உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான முசோரிக்குச் செல்லும் மலைப்பாதையில், காரில் வந்த சுற்றுலாப் பயணிகள் சிலர் அநாகரிகமாகப் பிளாஸ்டிக் குப்பைகளை ரோட்டில் வீசி எறிந்துள்ளனர்.

இதைக் கண்டு கடும் கோபமடைந்த சமூக ஆர்வலரான அனூப் நௌடியல் என்பவர், சும்மா வேடிக்கை பார்க்காமல், தன் காரை விட்டு கீழே இறங்கி அவர்கள் வீசிய பிளாஸ்டிக் கப் மற்றும் ஸ்பூனை கைகளில் எடுத்துக் கொண்டு அந்த டாக்ஸியை அதிரடியாக மறித்துள்ளார்.

காரின் கண்ணாடியை இறக்கச் சொல்லி, உள்ளே இருந்த நடுத்தர வயதுப் பெண்ணிடம், அவர் ரோட்டில் வீசிய குப்பைகளை மிக அமைதியாகவும் கம்பீரமாகவும் கைகளிலேயே திருப்பிக் கொடுத்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Anoop Nautiyal (@anoop_nautiyal)

“சுற்றுலாத் தலங்களை இப்படி அசிங்கப்படுத்தாதீங்க, இது நம்ம நாடு, சுத்தமா வச்சுக்கோங்க” என்று அவர் பொறுமையாகப் பாடம் புகட்டிய விதம் அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

அந்தப் பெண்ணும் தனது தவறை உணர்ந்து, குப்பைகளைத் திரும்பப் பெற்றுக்கொண்டு மன்னிப்புக் கேட்டுள்ளார். இந்தச் சம்பவத்தை அனூப் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாகப் பகிர, அது லட்சக்கணக்கான பார்வைகளைக் கடந்து இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.

“இந்தியர்கள் நாட்டைத் தன் வீடாக நினைப்பதே இல்லை”, “படிப்பறிவு இருந்தும் பொது அறிவு இல்லை” என்று நெட்டிசன்கள் பலரும் குப்பை கொட்டும் சுற்றுலாப் பயணிகளைச் சமூக வலைத்தளங்களில் வளைத்து வளைத்து வறுத்தெடுத்து வருகின்றனர்.