உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில், காலில் பலத்த காயமடைந்து வலியால் துடித்துக்கொண்டிருந்த ஒரு தெரு நாய்க்குட்டியை கைகளில் தூக்கிக்கொண்டு, ரஷ்ய நாட்டைச் சேர்ந்த பெண் விலங்கின ஆர்வலரான பிங்க் நடாஷா என்பவர் நடுரோட்டில் உள்ளூர் நபர் ஒருவருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அந்த நபர் தான் அந்தச் சிறிய நாய்க்குட்டியின் காலை அடித்து உடைத்ததாகக் கூறி, நடாஷா பயங்கர ஆத்திரத்துடன் ஆங்கிலத்தில் கத்தி சண்டை போட்டுள்ளார். அப்போது சுற்றியிருந்த பொதுமக்களில் சிலர் இதை ஒரு வேடிக்கையாகப் பார்த்துச் சிரித்ததால், மேலும் ஆத்திரமடைந்த நடாஷா, “ஏன் சிரிக்கிறீங்க?” என்று எல்லோரையும் பார்த்து ஆக்ரோஷமாகக் கத்தியுள்ளார்.
View this post on Instagram
ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த அந்த வெளிநாட்டுப் பெண், நாய்க்குட்டியை கொடுமைப்படுத்தியதாகக் கூறப்படும் அந்த நபரைத் தாக்கியதோடு, அவரது முகத்தில் காறித்துப்பித் தனது உச்சக்கட்ட கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். கடந்த சில ஆண்டுகளாக வாரணாசியிலேயே தங்கி, அங்குள்ள ஆதரவற்ற தெருநாய்களைப் பராமரித்து வரும் நடாஷாவின் இந்த அதிரடி ஆக்ஷன் வீடியோ தற்போது இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.
விலங்குகளை வதைப்பவர்களுக்கு எதிராக தைரியமாகப் போராடிய அந்தப் பெண்ணை ஒருதரப்பினர் பாராட்டி வரும் நிலையில், நடுரோட்டில் அநாகரிகமாக நடந்துகொண்டதாக மற்றொரு தரப்பினர் விவாதித்து வருவதால் சோசியல் மீடியாவில் இந்த விவகாரம் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
