ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் வின்யார்ட் (Wynyard) என்ற இடத்திலிருந்து எப்பிங் (Epping) நோக்கிச் சென்று கொண்டிருந்த மின்சார ரயிலில், இளம்பெண் ஒருவருக்கு நேர்ந்த பாலியல் அத்துமீறல் சம்பவம் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரயிலில் அந்தப் பெண் அமர்ந்திருந்தபோது, அவருக்குப் பின்னால் அமர்ந்திருந்த காமுகன் ஒருவன், அந்தப் பெண்ணிடம் தொடர்ச்சியாக மூன்று முறை தவறான முறையில் நடந்து கொண்டு பாலியல் தொல்லை கொடுத்துள்ளான்.
இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பெண், உடனடியாகத் திரும்பி அந்த நபரை கையும் களவுமாகப் பிடித்துக் கூச்சலிட்டுள்ளார். மாட்டிக்கொண்ட பயத்தில் அந்த நபர் தொடர்ந்து மன்னிப்புக் கேட்டுக்கொண்டே அங்கிருந்து நைசாக நழுவப் பார்த்துள்ளான்.
View this post on Instagram
ஆனால், அந்தப் பெண் விடாப்பிடியாக ரயிலில் இருந்த அவசரக்கால இண்டர்காம் (Intercom) மூலமாக ரயில்வே ஊழியர்களுக்குப் புகாரளித்ததோடு, தனது மொபைல் போனை எடுத்து அந்த நபரை வீடியோவும் எடுக்கத் தொடங்கியுள்ளார்.
நார்த் ஸ்ட்ராத்பீல்ட் (North Strathfield) ரயில் நிலையம் வந்ததும் அந்த நபர் ரயிலை விட்டு இறங்கி தப்பியோட முயன்றபோது, அந்தப் பெண்ணும் பின்னாடியே இறங்கி, “ஓடாதே நில்!” என்று கத்திக்கொண்டே அவனை ஓட ஓட விரட்டிச் சென்று வீடியோ எடுத்துள்ளார்.
பின்னர், அந்தப் பரபரப்பான வீடியோ மற்றும் புகைப்பட ஆதாரங்களுடன் நியூ சவுத் வேல்ஸ் (NSW) காவல்துறையிடம் அந்தப் பெண் அதிகாரப்பூர்வமாகப் புகாரளித்துள்ளார்.
பெண்ணிடம் அநாகரிகமாக நடந்து கொண்டு தப்பியோடிய அந்த மர்ம நபரைப் பிடிப்பதற்காக, ரயிலிலும் ரயில் நிலையத்திலும் உள்ள சிசிடிவி (CCTV) காட்சிகளைப் போலீசார் தீவிரமாக ஆய்வு செய்து, வலைவீசித் தேடி வருகின்றனர்.
