பிரேசில் நாட்டின் சாவோ பாவ்லோ (Sao Paulo) நகரில், சாலையில் நிறுத்தப்பட்டிருந்த பைக் ஒன்றின் பக்கவாட்டுக் கண்ணாடியில் (Mirror) மாட்டப்பட்டிருந்த ஹெல்மெட்டைச் சுற்றி ஆயிரக்கணக்கான தேனீக்கள் மொய்த்து, ஒரே நாளில் பிரம்மாண்டமாகத் தங்களது கூட்டைக் கட்டியுள்ள வினோத சம்பவம் இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.

அங்குள்ள நபர் ஒருவர் தனது பைக்கை வழக்கம் போல் ஓரிடத்தில் பார்க் செய்துவிட்டுச் சென்றுள்ளார். பின்னர் சில மணி நேரங்கள் கழித்து வந்து பார்த்தபோது, அவரது ஹெல்மெட் இருந்த இடமே தெரியாத அளவுக்கு ஒட்டுமொத்தமாகத் தேனீக்களின் கூட்டமாக மாறியிருந்ததைக் கண்டு பயத்தில் உறைந்துபோய் அப்படியே ஸ்தம்பித்து நின்றுள்ளார்.

தேனீக்கள் கொட்டிவிடும் என்ற அச்சத்தில் தனது பைக்கைக் கூடத் தொடுவதற்கு அந்த நபருக்குத் துணிச்சல் வரவில்லை. பார்ப்பதற்கே உடம்பெல்லாம் சிலிர்க்க வைக்கும் இந்த பயங்கரக் காட்சியை அங்கிருந்தவர்கள் தங்களது மொபைல் போனில் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர்.

இன்ஸ்டாகிராமில் வெளியான இந்த வீடியோவை இதுவரை லட்சக்கணக்கான மக்கள் பார்த்துத் தங்களது அதிர்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். இறுதியில் இதுகுறித்துத் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள் (Environmental Department Team), எந்தவொரு அசம்பாவிதமும் இல்லாமல் ஹெல்மெட்டில் இருந்த தேனீக்களைப் பத்திரமாக மீட்டு அப்புறப்படுத்திய பிறகே அந்த வாகன ஓட்டி நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளார்.