வீட்டில் ஹெட்போன் மாட்டிக்கொண்டு படித்துக்கொண்டிருந்த மகளை, பெற்ற தாயும் சகோதரனும் சேர்ந்து கண்டித்து, வாக்குவாதத்தில் ஈடுபட்ட அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி, இணையவாசிகளிடையே பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. எக்ஸ் பக்கத்தில் @Kritical_62 என்ற பயனர் இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அதில், “அந்தப் பெண்ணின் தாய் மற்றும் சகோதரனின் செயல் வெட்கக்கேடானது. அவளிடம் தவறாக நடந்துகொள்ள அவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை. அவள் தனது காதலனுடன் பேசிக்கொண்டிருந்தாள், இதில் எந்தத் தவறும் இல்லை…” என்ற குறிப்புடன் இந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது.

அந்த வீடியோவில், காதில் ஹெட்போன் மாட்டிக்கொண்டு அமர்ந்திருக்கும் அந்தப் பெண்ணிடம் அவளது சகோதரன், “காதில் மாட்டிட்டு என்ன பண்ணிட்டு இருக்க?” என்று கேட்கிறான். அடுத்த சில நொடிகளில், அங்கிருந்த தாய் அந்தப் பெண்ணை ஓங்கி அறைகிறார். இதனால் அந்த அறைக்குள் பெரும் வாக்குவாதம் வெடிக்கிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், தான் படித்துக்கொண்டிருந்ததாகக் கூறி அழுதுகொண்டே வாதிடுகிறார். “நான் படித்துக்கொண்டுதான் இருந்தேன், இதோ பாருங்கள்” என்று புத்தகங்களைக் காட்டுகிறார்.

 

ஆனால், தான் வீட்டிற்கு வந்து நீண்ட நேரமாகக் கூப்பிட்டும், காதில் ஹெட்போன் மாட்டியிருந்ததால் மகள் பதில் சொல்லவில்லை என்பது தாயின் குற்றச்சாட்டாக உள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த அந்தப் பெண், தன் கையில் இருந்த புத்தகத்தைச் சுவற்றில் எறிந்து, “நான் படித்துக்கொண்டுதான் இருந்தேன், தேவையில்லாமல் என் மனதை ஏன் அலைக்கழிக்கிறீர்கள்? ஹெட்போன் மாட்டிக்கொண்டுதான் படிக்க முடியும், வேறு எப்படிப் படிப்பது?” என்று கத்துகிறார்.

ஒரு கட்டத்தில், தான் வெளியில் சென்றுவிட்டு வரும் வரை ஏன் சமையல் செய்யவில்லை என்று தாய் கேட்க, அதற்கு அந்தப் பெண், “உங்களுடைய வேலையை நீங்களே செய்துகொள்ளுங்கள்” என்று முகத்திலடித்தாற்போல் கூறுகிறார். இதனால் கோபமடைந்த தாய், “இப்படி இருந்தால் புகுந்த வீட்டில் உனக்கு என்ன நடக்கும்?” என்று கேட்க, அதற்கு அந்தப் பெண், “உங்களுக்கு என்ன நடந்துகொண்டிருக்கிறதோ, அதுதான் எனக்கும் நடக்கும்” என்று பளிச்சென்று பதிலடி கொடுக்கிறார். மகளின் இந்த அதிரடி பதில் தற்போது இணையத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. முழு சம்பவத்தையும் அந்தப் பெண்ணின் சகோதரன் தனது மொபைலில் வீடியோவாகப் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பரவியதைத் தொடர்ந்து, இணையவாசிகள் தங்களது கருத்துக்களை இருவேறாகப் பகிர்ந்து வருகின்றனர்.