இமாச்சலப் பிரதேசத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் வீராங்கனை ரேணுகா சிங் தாக்கூர், தனது வலது கையில் தந்தை-மகள் பாசத்தைச் சித்தரிக்கும் ஒரு உணர்வுப்பூர்வமான டாட்டூவை குத்தியுள்ளார். தனக்கு வெறும் மூன்று வயதாக இருந்தபோதே தனது தந்தை கேஹர் சிங் தாக்கூர் காலமானார் என்று ரேணுகா சமீபத்தில் பகிர்ந்துள்ளார். தன் தந்தை தன்னை ஒரு கிரிக்கெட் வீராங்கனையாக பார்க்க ஆசைப்பட்ட கனவை நெஞ்சில் சுமந்து, மலைச்சரிவுகளிலிருந்து சர்வதேச கிரிக்கெட் மைதானங்கள் வரை அத்தனை கஷ்டங்களையும் கடந்து வந்து சாதித்துக் காட்டியுள்ளார் இந்த இமாச்சலத்து மகள்.
ரேணுகாவின் தாயார் சுனிதா தாக்கூர், பல போராட்டங்களுக்கு மத்தியில் தனது மகளை வளர்த்துள்ளார். அவர் கூறுகையில், “ரேணுகா இந்த டாட்டூவை குத்திக்கொள்வதற்கு முன்பு என்னிடம் அனுமதி கேட்டார், அவர் இன்றும் தன் அப்பாவை எவ்வளவு மிஸ் செய்கிறார் என்பது எனக்குத் தெரியும்” என்று நெகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார்.
அந்தப் பச்சைக்குத்தில், ஒரு தந்தை தன் மகளை அன்போடு காற்றில் தூக்கி எறிவது போல் சித்தரிக்கப்பட்டு, அவரது பிறப்பு மற்றும் இறப்பு தேதிகளும் பொறிக்கப்பட்டுள்ளன. சிறு வயதிலேயே, “அம்மா, நான் ஒருநாள் என் அப்பாவின் கனவை கண்டிப்பா நனவாக்குவேன்” என்று சொன்னபடியே செய்து காட்டிய மகளை நினைத்து பெருமைப்படுவதாக அவரது தாய் உருக்கமாகக் கூறியுள்ளார்.
