டெல்லியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், நொய்டா பகுதியில் பகல் நேரத்தில் தனது தோழிகளுடன் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தபோது, காரில் வந்த மூன்று ஆசாமிகள் தங்களை மிகக் கொடூரமான முறையில் பின்தொடர்ந்து மிரட்டியதாகப் பகிர்ந்துள்ள வீடியோ சமூக வலைத்தளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தீபிகா என்ற அந்த இளம்பெண் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள வீடியோவில், கடந்த வெள்ளிக்கிழமை அலுவலகம் முடிந்து தோழிகளுடன் ஆட்டோவில் வீட்டிற்குத் திரும்பியபோது இந்த விபரீதம் நடந்துள்ளது.

அவர்கள் ஆட்டோவில் சென்றுகொண்டிருந்தபோது, திடீரென பின்னால் வந்த ஒரு கார் இவர்களது ஆட்டோவை முந்திச் செல்ல முயன்றும், மிக நெருக்கமாக வந்தும் ஆபத்தான முறையில் துரத்தத் தொடங்கியுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Deepika (@tangerinesvault)

என்ன நடக்கிறது என்று புரியாமல் அவர்கள் காரை உற்றுப் பார்த்தபோது, காரின் உள்ளே இருந்த காட்சி அவர்களை உறைந்து போகச் செய்துள்ளது. காரில் இருந்த மூன்று ஆண்களில், முன் இருக்கையில் இருந்த ஒருவன் உடம்பில் துணிகூட இல்லாமல் முழு நிர்வாணமாகத் தனது கால்களை டேஷ்போர்டில் தூக்கி வைத்துக்கொண்டு இவர்களைப் பார்த்து விகாரமாகச் சிரித்துள்ளான்.

அவனுடன் பின் சீட்டில் இருந்த மற்றொருவனும் நிர்வாணமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. பயந்துபோன பெண்கள் ஆட்டோவை வேகமாக ஓட்டச் சொல்லியுள்ளனர், ஆனால் அந்த ஆசாமிகள் காரை ஆட்டோவிற்கு முன்னால் கொண்டு வந்து திடீர் பிரேக் போட்டு வழிமறித்து வளைக்க முயன்றுள்ளனர்.

இந்தக் கொடூரமான அனுபவத்தால் தங்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை என்று கூறிய தீபிகா, “நாங்கள் பயத்தில் அப்படியே உறைந்து போய்விட்டோம், காரின் நம்பரைக் கூட எங்களால் குறிக்க முடியவில்லை” என்று கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தச் சம்பவத்திற்குப் பிறகு சாலையில் தனியாகவோ அல்லது ஆட்டோவிலோ செல்லவே 100 மடங்கு பயமாக இருக்கிறது என்றும், நொய்டா பகுதியில் உள்ள ஒதுக்குப்புறமான சாலைகளில் செல்லும் பெண்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறும் அவர் உருக்கமாகக் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வரும் நிலையில், அந்தப் பொறுக்கிகளை உடனடியாகக் கண்டுபிடித்துக் கைது செய்ய வேண்டும் எனப் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உத்தரப் பிரதேச போலீசாருக்குக் கண்டனக் குரல்களை எழுப்பி வருகின்றனர்.