இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகத்தின் மகளிர் குளியலறையில் (பாத்ரூம்), மாணவிகள் குளிப்பதை ஒரு துப்புரவுத் தொழிலாளி தனது மொபைல் போனில் ரகசியமாக வீடியோ எடுத்த அதிர்ச்சி சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அம்மாநிலத்தின் சிர்மவுர் (Sirmaur) மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற ‘எடர்னல்’ பல்கலைக்கழகத்தில் (Eternal University) ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சேதன் சாஹு என்ற நபர் கடந்த சில மாதங்களாகத் துப்புரவுத் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்த நிலையில், அந்த வளாகத்தில் உள்ள மாணவிகளுக்கான கழிவறை மற்றும் குளியலறைக்குள் புகுந்து, அங்குள்ள மாணவிகளைத் தனது மொபைல் போன் மூலம் ரகசியமாக ஆபாச வீடியோ எடுத்ததாக மாணவிகள் தரப்பில் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் அதிரடியாகப் புகார் அளிக்கப்பட்டது.

ஆனால், நிர்வாகம் உடனடியாக எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த மாணவ, மாணவிகள் பல்கலைக்கழக வளாகத்திற்குள் திரண்டு நள்ளிரவில் மிகத் தீவிரமான போராட்டத்தில் குதித்தனர். இதனிடையே, நிலைமை மோசமாவதை உணர்ந்து பல்கலைக்கழகத்தை விட்டுத் தப்பியோட முயன்ற அந்தத் துப்புரவுத் தொழிலாளியை மாணவர்கள் ஓட ஓட விரட்டிப் பிடித்து தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பசாத் பகுதி போலீசார் அந்த ஆசாமியைக் கைது செய்து, அவரிடமிருந்த மொபைல் போனைப் பறிமுதல் செய்தனர்.

முதற்கட்ட விசாரணையில், அவன் தனது மொபைலில் இருந்த வீடியோக்கள் சிலவற்றை அவசர அவசரமாக அழித்திருப்பது தெரியவந்துள்ளது.

அந்த வீடியோக்கள் எப்போது எடுக்கப்பட்டன, அவை வேறு எங்கும் இணையத்தில் பகிரப்பட்டதா என்பது குறித்து சைபர் க்ரைம் போலீசார் உதவியுடன் மிகத் தீவிரமாக விசாரணை நடத்தி வருவதாகப் போலீஸ் எஸ்பி நிஸ்சிந்த் சிங் நெகி தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் கல்லூரி மாணவிகளிடையே தங்களது பாதுகாப்பு குறித்த பெரும் அச்சத்தையும், பெற்றோர்களிடையே பெரும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.