மகாராஷ்டிர மாநிலம் நாசிக், மக்மலாபாத் சாலையில் உள்ள ஜாதவ் காலனி பகுதியில், பழைய பழக்கத்தைப் பயன்படுத்தி வீட்டிற்குள் புகுந்து திருமணமான பெண்ணைக் கத்தியைக் காட்டி பலாத்காரம் செய்ய முயன்ற சந்தேக நபர் மீது  போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட 29 வயது பெண், இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு குற்றம் சாட்டப்பட்ட ஜெய் கணேஷ் கோத்துலே (28) என்பவரின் அலுவலகத்தில் பணிபுரிந்துள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை (மே 19) மதியம் அப்பெண்ணின் குழந்தைகள் விளையாட வெளியே சென்றிருந்த நேரத்தில், அவர் வீட்டில் தனியாக இருப்பதைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட ஜெய் கோத்துலே, அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.

சமையலறை கத்தியைக் காட்டி அப்பெண்ணை மிரட்டியதுடன், தனது ஆசைக்கு இணங்காவிட்டால் வெளியே விளையாடச் சென்றுள்ள அவரது இரு குழந்தைகளையும் கொலை செய்துவிடுவதாகக் கொடூரமாக மிரட்டி பாலியல் வன்புணர்வு செய்ய முயன்றுள்ளார்.

“உனக்கு இரண்டு நாட்கள் அவகாசம் தருகிறேன்” என்று மீண்டும் மிரட்டிவிட்டு அவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இந்தத் தொடர்ச்சியான உடல் மற்றும் மன ரீதியான சித்திரவதைகளாலும், பயத்தினாலும் கடும் மன உளைச்சலுக்கு ஆளான அந்தப் பெண், வீட்டில் இருந்த ஃபினைலைக் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்ததும் அவர் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அப்பெண்ணின் வாக்குமூலத்தின் அடிப்படையில், தத்தாநகர் பகுதியைச் சேர்ந்த ஜெய் கோத்துலே மீது பஞ்சவடி காவல் நிலைய போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.