பீகார் மாநிலத்தில் தன் காதலனுடன் தப்பி ஓடுவதற்காக, 16 வயது சிறுமி ஒருவர் கோழியின் இரத்தத்தை வீடு முழுவதும் பரப்பிவிட்டு கொலை நாடகமாடிய விசித்திர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகாரின் படிஹா கிராமத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர், கடந்த ஏப்ரல் 30-ஆம் தேதி இரவு திடீரென மாயமானார். அவரது வீடு முழுவதும் இரத்தம் சிதறி கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், சிறுமி கடத்திக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என அஞ்சி காவல்துறையிடம் புகாரளித்தனர்.
ஆரம்பத்தில் இதனை ஒரு கொலை வழக்காகக் கருதி விசாரணையைத் தொடங்கிய காவல்துறையினர், தடய அறிவியல் சான்றுகள், கைபேசிப் பதிவுகள் மற்றும் இருப்பிட சமிக்ஞை (Mobile Location) ஆகியவற்றின் அடிப்படையில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.
இவ்விசாரணையின் முடிவில், அச்சிறுமி கடத்தப்படவில்லை என்பதும், மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டம் பிவண்டியில் தனது காதலன் மயங்க் குமாருடன் வசித்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து பிவண்டிக்கு விரைந்த காவல்துறையினர் காதலனைக் கைது செய்து, இருவரிடமும் விசாரணை நடத்தினர். கடந்த 5 ஆண்டுகளாகக் காதலித்து வந்த தங்களது உறவை வீட்டார் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்ற பயத்தினால், தாங்கள் தப்பி ஓடத் திட்டமிட்டதாக அவர்கள் ஒப்புக்கொண்டனர்.
மேலும், தங்களைத் தேடுவதைக் கைவிடச் செய்யவும், ஏதோ பயங்கரமான கொடூரச் சம்பவம் நடந்துவிட்டதாகக் குடும்பத்தினரையும் காவல்துறையினரையும் நம்ப வைக்கவுமே கோழியை வெட்டி அதன் இரத்தத்தை வீடு முழுவதும் பரப்பியதாக அச்சிறுமி வாக்குமூலம் அளித்துள்ளார்.
தொழில்நுட்ப உதவியுடன் இந்த மர்ம வழக்கை வெற்றிகரமாகத் தீர்த்துள்ளதாகத் தெரிவித்த தேஹ்ரி ஏ.எஸ்.பி அதுலேஷ் ஜா, அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
