வேலூர் கணியம்பாடி பகுதியில் உள்ள செங்கல் சூளை உரிமையாளர்களிடம், தமிழக வெற்றிக் கழக ஒன்றிய செயலாளர் “எங்கள் ஆட்சி நடப்பதால் எங்களுக்கு மாதம் மாமூல் தர வேண்டும்” எனக் கூறி மிரட்டியதாக காவல் நிலையத்தில் கிராம மக்கள் திரண்டு புகார் அளித்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக, “யார் உன்னிடம் ஒரு லட்சம் ரூபாய் கேட்டது?” என தவெக நிர்வாகிக்கும், புகார் அளித்தவர்களுக்கும் இடையே காவல் நிலைய வளாகத்திலேயே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு, அதுகுறித்த காணொளி தற்போது எக்ஸ் (X) தளத்தில் தீயாய் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

​இந்த விவகாரம் பூதாகரமான நிலையில், சம்பந்தப்பட்ட தவெக நிர்வாகி விளக்க வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கணியம்பாடி பகுதியில் சட்டவிரோதமாக கனிம வளங்கள் திருடப்படுவதை தான் தட்டி கேட்டு புகார் அளித்ததாகவும், அந்த ஆத்திரத்தில் தன் மீது தேவையில்லாமல் பணம் கேட்டு மிரட்டியதாகப் பழிவாங்கும் நோக்கில் பொய் புகார் கொடுத்து சித்தரித்துள்ளனர் என்றும் கூறியுள்ளார். மேலும், இந்த அபாண்டமான பழிச்சொல் குறித்து தான் மாவட்ட எஸ்பி (SP) அலுவலகத்தில் நேரில் புகார் அளிக்கப் போவதாகவும் அவர் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.