தலைநகர் சென்னையில் நிலவும் கடும் மின்வெட்டுப் பிரச்னை, முதல்வர் விஜய் தலைமையிலான அரசுக்கு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. கோடைக் காலத்தின் உச்சத்தில் வெப்பம் வாட்டி வதைக்கும் சூழலில், நள்ளிரவு நேரங்களில் தொடர்ச்சியாக நான்கு மணி நேரம் வரை மின்சாரம் துண்டிக்கப்படுவது பொதுமக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த மின் தடையால் தூக்கமின்றித் தவிக்கும் கொளத்தூர் பகுதி மக்கள், ஆத்திரமடைந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மின்சார விநியோகத்தில் ஏற்பட்டுள்ள இந்தச் சீரற்ற நிலை, மக்களின் அன்றாட வாழ்க்கையைப் பெரிதும் பாதித்துள்ளதால், அரசுக்கு எதிராகக் கண்டனங்கள் வலுத்து வருகின்றன.

இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்து, சட்டம்-ஒழுங்கு சிக்கலாக மாறுவதற்குள் நிலைமையை உடனடியாகச் சரிசெய்யுமாறு அரசுத் தரப்பில் இருந்து உயர்மட்ட அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் மின்சாரத் தட்டுப்பாட்டிற்கான காரணங்களைக் கண்டறிந்து, தடையற்ற மின்சாரத்தை உறுதி செய்யப் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். மக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைக் கருத்தில் கொண்டு, மின்சார வாரியம் இந்தச் சிக்கலைத் தீர்ப்பதில் விரைந்து செயல்படுமா என்பதுதான் தற்போதைய எதிர்பார்ப்பாக உள்ளது.