சென்னை ராயபுரத்தில் சமூக ஆர்வலரைத் தாக்கிய விவகாரத்தில், ராயபுரம் சட்டம்-ஒழுங்கு காவல் ஆய்வாளர் சிதம்பர பாரதி அதிரடியாகக் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
ராயபுரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில், தன்னை ஏமாற்றிவிட்டு வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்ய முயன்ற நபருக்கு எதிராகப் போராடிய பெண்ணுக்கு ஆதரவாகச் செயல்பட்ட சமூக ஆர்வலரை, காவல் ஆய்வாளர் தாக்கியதாகச் சென்னை மாநகரக் காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது.
இந்தப் புகாரின் அடிப்படையில் காவல் ஆணையர் இந்த அதிரடி ஒழுங்கு நடவடிக்கை உத்தரவைப் பிறப்பித்துள்ளார். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக சம்பவ இடத்திற்கு வந்த தவெக சட்டமன்ற உறுப்பினர் (MLA) விஜய் தாமுவிடம், காவல் ஆய்வாளர் சிதம்பர பாரதி கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது கோட்டை மற்றும் காவல் துறை வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
