தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நாளன்று ஏற்பட்ட மோதல் விவகாரம் தொடர்பாக, திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பி.கே.சேகர்பாபு மீது சென்னை வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் 4 பிரிவுகளின் கீழ் அதிரடியாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் நாளன்று சென்னை துறைமுகம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிப் பகுதியில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வேட்பாளர் சினோரா அசோக் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கும், திமுகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அது கடுமையான மோதலாக வெடித்தது.

இந்தத் தள்ளுமுள்ளு சம்பவத்தைத் தொடர்ந்து சினோரா அசோக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், முன்னாள் அமைச்சர் சேகர்பாபுவால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகச் சென்னை மாநகரக் காவல் ஆணையர் அலுவலகத்தில் முறைப்படி புகார் அளிக்கப்பட்டது.

அந்தப் புகாரின் அடிப்படையில் தற்போது வடக்கு கடற்கரை போலீஸார் முன்னாள் அமைச்சர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருவது சென்னை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.