முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அமைச்சரவையில் இணைய உள்ளதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) தலைவர் திருமாவளவன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
“ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு” என்ற விசிகவின் 25 ஆண்டுகால முழக்கம் இதன் மூலம் நனவாகி உள்ளது. திமுக மற்றும் அதிமுக கூட்டணிகளில் விசிக மாறி மாறி அங்கம் வகித்தபோதும் இதுவரை அமைச்சரவையில் இடம் கிடைக்காத நிலையில், தவெக தலைவர் விஜய் கொடுத்த வாக்குறுதியின்படி இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
விசிக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களில், வன்னியரசு அவர்களின் பெயர் அமைச்சரவைக்காகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இன்று காலை 10 மணிக்கு ஆளுநர் மாளிகையில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் அவர் அமைச்சராகப் பொறுப்பேற்பார் என்றும், அவருக்கு ஆதிதிராவிடர் நலத்துறை ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
அமைச்சரவை விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக, தவெக சார்பில் 21 பேரும், காங்கிரஸ் சார்பில் 2 பேரும் ஏற்கனவே புதிய அமைச்சர்களாகப் பதவியேற்றுள்ள நிலையில், அமைச்சரவையின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது.
இன்று விசிக சார்பில் வன்னியரசு மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் ஷாஜகான் ஆகிய இருவரும் புதிய அமைச்சர்களாகப் பதவியேற்க உள்ளனர். ஷாஜகான் அவர்களுக்குச் சிறுபான்மையினர் நலத்துறை ஒதுக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது.
இவர்களின் பதவியேற்பிற்குப் பின், தமிழ்நாடு அமைச்சரவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 35 ஆக உயரும். மேலும், தமிழக அமைச்சரவை வரலாற்றில் முதன்முறையாக விசிக அங்கம் வகிப்பதோடு, ஒட்டுமொத்த அமைச்சரவையில் பட்டியலினத்தைச் சேர்ந்த அமைச்சர்களின் எண்ணிக்கை 8 ஆக உயரும் என்பது குறிப்பிடத்தக்கது.
