திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை அடுத்த அரியத்துறை பகுதியைச் சேர்ந்த பாபு என்பவரின் மகன் அபிஷேக், அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வந்தார்.
பொதுத்தேர்வை முடித்துவிட்டு, தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடச் சென்ற அபிஷேக், அதன் பின்னர் அருகில் உள்ள ஏரியில் குளிக்கச் சென்றபோது துரதிர்ஷ்டவசமாக நீரில் மூழ்கி உயிரிழந்தார். இந்தச் சோகம் அப்பகுதியினரை பெரும் துயரத்தில் ஆழ்த்தியிருந்தது.

இந்த நிலையில், நேற்று வெளியான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில், உயிரிழந்த மாணவர் அபிஷேக் 500-க்கு 495 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. சிறப்பான எதிர்காலத்தைக் கனவு கண்ட மாணவன், தேர்வு முடிவுகள் வருவதற்கு முன்பே உயிரிழந்த செய்தியும், அவர் கல்வியில் முத்திரை பதித்த செய்தியும் அவரது குடும்பத்தினர் மற்றும் ஆசிரியர்கள் இடையே பெரும் கண்ணீரை வரவழைத்துள்ளது.
