2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சந்தித்த பின்னடைவைத் தொடர்ந்து, கட்சிக்குள் வெடித்துள்ள உட்கட்சி மோதல் தற்போது எடப்பாடி பழனிசாமி மற்றும் சி.வி.சண்முகம் – எஸ்.பி.வேலுமணி தரப்புகளுக்கு இடையே உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
தவெகவுடன் கூட்டணி அமைக்காததே தோல்விக்குக் காரணம் எனக் கூறி, சண்முகம் தரப்பைச் சேர்ந்த 25 எம்.எல்.ஏ-க்கள் தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்ததால் அதிர்ச்சியடைந்த எடப்பாடி பழனிசாமி, பல நிர்வாகிகளின் பதவிகளைப் பறித்தார். இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, எடப்பாடியின் நடவடிக்கைகள் செல்லாது என அறிவித்துள்ள சண்முகம் தரப்பு, தோல்விக்கான காரணங்களை விவாதிக்கப் பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும் எனத் தீவிரமாக வலியுறுத்தி வருகிறது.
தங்களுக்குப் பெரும்பான்மை பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாகக் கூறி, சி.வி.சண்முகமே பொதுக்குழுவைக் கூட்டத் தயாராகி வருவது எடப்பாடி பழனிசாமியின் பொதுச் செயலாளர் பதவிக்கே பெரும் ஆபத்தாக உருவெடுத்துள்ளது. தனது கட்டுப்பாட்டை உறுதிப்படுத்த எடப்பாடி பழனிசாமி அவசரமாகக் கூட்டிய மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், அவருக்கு ஆதரவு இருப்பதாகக் கூறினாலும் புதிய சிக்கல்களையே ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவின் 82 மாவட்டச் செயலாளர்களில் குறைந்த எண்ணிக்கையிலானவர்களே இதில் பங்கேற்றதோடு, செல்லூர் ராஜூ, ராஜேந்திர பாலாஜி போன்ற முக்கிய தலைவர்கள் இக்கூட்டத்தைப் புறக்கணித்துள்ளனர்; ஜெயக்குமார் இன்னும் மௌனம் காத்து வருகிறார்.
மறுபுறம், ஐந்தில் ஒரு பங்கு உறுப்பினர்கள் கோரினாலே பொதுக்குழுவைக் கூட்டலாம் என்ற விதி இருக்க, சண்முகம் தரப்பிடம் தற்போது ஐந்தில் மூன்று பங்கு உறுப்பினர்களின் கையெழுத்தும், நீக்கப்பட்ட மாவட்டச் செயலாளர்களின் ஆதரவும் இருப்பதாகக் கூறப்படுகிறது. எடப்பாடி தரப்பு சமரச சைகை காட்டினாலும், சண்முகம் தரப்பு பொதுக்குழுவைக் கூட்ட அதிரடியாகத் தயாராகி வருவதால் அதிமுகவில் அடுத்தகட்டப் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.
