தமிழகத்தில் தவெக தலைவர் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, முந்தைய திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, மகளிர் விடியல் பேருந்து பயணம், புதுமைப் பெண் மற்றும் நான் முதல்வன் போன்ற முக்கியத் திட்டங்களை எந்தவித மாற்றமும் இன்றித் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்.
இத்திட்டங்களின் மூலம் நேரடியாகப் பயனடைந்த லட்சக்கணக்கான பெண்கள், மாணவர்கள் மற்றும் நடுத்தரக் குடும்பங்கள் கடந்த தேர்தலில் தவெகவிற்கு ஆதரவாக வாக்களித்ததாகக் கருதப்படும் நிலையில், அவற்றை அப்படியே தொடர்வதன் மூலம் அந்த வாக்குவங்கியைத் தக்க வைக்க விஜய் முயல்கிறார்.
மேலும், இத்திட்டங்களை நிறுத்தியிருந்தால் அதையே திமுக தனக்கான அரசியல் ஆயுதமாக மாற்றியிருக்கும் என்பதால், அந்த வாய்ப்பையும் முதலமைச்சர் விஜய் முன்கூட்டியே தடுத்து எதிர்க்கட்சிகளை அரசியல் செய்யவிடாமல் முடக்கியுள்ளார் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
மறுபுறம், கடந்த 2013-ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களால் தொடங்கப்பட்டு, ஏழை எளிய மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘அம்மா உணவகம்’ திட்டத்தை மீண்டும் சிறப்பாகச் செயல்படுத்தவும், உணவகங்களைப் புதுப்பித்து உணவின் தரத்தை உயர்த்தவும் முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு இத்திட்டம்போதிய கவனிப்பின்றிப் பழுதடைந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், தவெக அரசின் இந்த அதிரடி உத்தரவு அதிமுகவினரையும் அதன் பாரம்பரிய ஆதரவாளர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஏற்கனவே சி.வி.சண்முகம் தலைமையிலான 25 அதிமுக எம்.எல்.ஏ-க்கள் தவெக அரசுக்கு ஆதரவளித்துள்ள சூழலில், அடித்தட்டு மக்களிடம் உணர்ச்சி ரீதியான தாக்கத்தை ஏற்படுத்திய அம்மா உணவகங்களை உயிர்ப்பிப்பதன் மூலம் அதிமுகவின் பாரம்பரிய வாக்குவங்கியையும் தன் பக்கம் இழுக்க விஜய் திட்டமிட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.
