அமெரிக்காவின் பெவர்லி ஹில்ஸில் உள்ள ‘பொஸ்ஸா’ என்ற ஆடம்பர உணவகத்தில், பிறந்தநாள் கொண்டாட வந்த வாடிக்கையாளர்களுக்குக் கேக் வெட்டுவதற்காக மட்டும் 110 டாலர் (கிட்டத்தட்ட 10,000 ரூபாய்க்கும் மேல்) கட்டணம் வசூலிக்கப்பட்ட சம்பவம் சமூக ஊடகங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்ஸ்டாகிராமில் உணவுப் பிரபலம் ஒருவர் பகிர்ந்த இந்த பில்லின் புகைப்படம் இணையத்தில் வைரலானதை அடுத்து, நெட்டிசன்கள் பலரும் இந்த விசித்திரமான கூடுதல் கட்டணத்திற்குக் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

வாடிக்கையாளர்கள் ஏற்கனவே உணவு, வரிகள் மற்றும் டிப்ஸ்களுக்காகப் பெருமளவு பணத்தைச் செலுத்தும் நிலையில், கேக் வெட்டுவதற்கு ஒரு நபருக்கு 10 டாலர் வீதம் வசூலிப்பது நியாயமற்றது என்று பலரும் விமர்சித்தனர்.

இந்த சர்ச்சை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, அந்த உணவகம் இன்ஸ்டாகிராம் மூலம் பொதுமக்களிடம் மன்னிப்புக் கோரியதோடு, உரிய விளக்கத்தையும் அளித்துள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by 𝚓𝚞𝚜𝚝𝚒𝚗𝚎 • 𝚏𝚘𝚘𝚍 𝚗 𝚏𝚞𝚗 ˶ᵔ ᵕ ᵔ˶ (@justinelovesushi)

“>

கேக் வெட்டும் கட்டணம் குறித்து வாடிக்கையாளர்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்கத் தவறியது தங்களின் சேவைத் தரத்திற்கு முரணானது என்பதை ஒப்புக்கொண்ட உணவகம், பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு அந்தக் கட்டணத்தை முழுமையாகத் திரும்பத் தருவதாக உறுதியளித்துள்ளது.

மேலும், தங்களின் தவறைத் திருத்திக்கொள்ளும் விதமாக, கேக் வெட்டுவதற்கான கட்டணத்தை இனி ஒரு நபருக்கு 10 டாலரிலிருந்து 5 டாலராகப் பாதியாகக் குறைப்பதாகவும் அந்த உணவகம் அறிவித்துள்ளது.