நொய்டாவைச் சேர்ந்த புனீத் ஜிண்டால் என்பவர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட ஆடம்பர அடுக்குமாடிக் குடியிருப்பு குறித்த ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அந்த வீடியோவில், நீச்சல் குளம், பிரம்மாண்ட கிளப்ஹவுஸ், யோகா பகுதி எனப் பார்க்கச் சொர்க்கம் போல் இருக்கும் தனது குடியிருப்பு வளாகத்தைச் சுற்றிக் காட்டும் அவர், அடுத்த கணமே அதன் மறுபக்கத்தையும் விளக்குகிறார்.
குடியிருப்புகளின் மோசமான வடிவமைப்பு காரணமாகச் சமையல் வாசனை வீடு முழுவதும் பரவுவது, கழிப்பறை துர்நாற்றம் மற்றும் ஏர் கண்டிஷனர்களின் இடைவிடாத இரைச்சல் போன்றவற்றால் பால்கனிகளில் சுத்தமான காற்றே கிடைப்பதில்லை என்றும், வெளியில் சொர்க்கமாகத் தெரிவது உள்ளே நரகமாக உணர்கிறது என்றும் அவர் வேதனைப்படுகிறார்.
மேலும், பெருநகரங்களில் இருக்கும் ‘நிதிப் பொறி’ குறித்துப் பேசிய அவர், 20 ஆண்டுகால வீட்டுக் கடன் மற்றும் மாதத் தவணைகளால் மக்கள் தங்களின் சம்பளத்தில் 50 முதல் 70 சதவீதத்தை இழந்துவிட்டு அடிமைகள் போல் வாழ வேண்டியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
View this post on Instagram
“>
கிராமத்தில் 25,000 ரூபாய் சம்பாதிப்பதும், நகரத்தில் 1,00,000 ரூபாய் சம்பாதிப்பதும் ஒன்றுதான் என்று அவர் கூறிய கருத்து இணையவாசிகளிடையே இருவேறு கருத்துக்களை உருவாக்கியுள்ளது. ஒரு தரப்பினர் இவருடைய கருத்தை 100% உண்மை என்று ஆதரிக்கும் நிலையில், மற்றொரு தரப்பினரோ தங்களுக்கு இப்படி ஒரு ஆடம்பர வீடு கிடைக்கவில்லையே என்று கிண்டலாகப் பதிவிட்டு வருகின்றனர்.
