சட்டமன்ற தேர்தல் தோல்விக்குத் தவெக-வின் பிஆர் உத்திகள்தான் காரணம் எனத் திமுகவினர் விமர்சித்து வரும் நிலையில், தோல்வி குறித்து தூத்துக்குடியில் கனிமொழி தலைமையில் திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய ஒரு திமுக நிர்வாகி, தவெக தலைவர் விஜய் மற்றும் தவெக-வினர் மீதுள்ள கோபத்தில், நடிகை த்ரிஷா குறித்து திடீரென மேடையில் தரக்குறைவாகவும் அவதூறாகவும் பேசத் தொடங்கினார். இது அங்கிருந்தவர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சலசலப்பையும் ஏற்படுத்தியது.
இதைக்கேட்டு கடும் கோபமடைந்த கனிமொழி, துளிகூட தாமதிக்காமல் உடனடியாக குறுக்கிட்டு அந்த நிர்வாகியை மேடையிலேயே பகிரங்கமாகக் கண்டித்தார். “பெண்கள் குறித்து நாம் அவதூறாகப் பேசக் கூடாது; நாம் திமுகவைச் சேர்ந்தவர்கள், எனவே எந்தவொரு பெண்ணையும் தரக்குறைவாகப் பேசுவதை ஏற்க முடியாது” என ஆக்ரோஷமாக அறிவுறுத்தினார். ஏற்கனவே அனிதா ராதாகிருஷ்ணன் தவெக மீது விமர்சனம் வைத்த சர்ச்சை ஓயாத நிலையில், த்ரிஷா குறித்த இந்த அவதூறு பேச்சும், அதற்கு கனிமொழி கொடுத்த நெத்தியடி பதிலடியும் அரசியல் வட்டாரத்தில் தீயாய் பரவி வருகிறது.
