தமிழகத்தின் புதிய முதலமைச்சராக சி. ஜோசப் விஜய் பொறுப்பேற்றுள்ள நிலையில், தவெக (தமிழக வெற்றிக் கழகம்) கட்சியினரை நோக்கி திமுகவின் முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தவெகவினர் முற்றிலும் ஒரு மாய உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களது உலகமே வேறு, நமது நிஜ உலகமே வேறு.

சமூக வலைதளங்கள் மற்றும் டிஜிட்டல் உலகத்தில் ஒரு பொய்யைத் திரும்பத் திரும்பச் சொல்வதன் மூலம், அதை உண்மையாக மாற்றிவிடலாம் என்று அவர்கள் தப்புக் கணக்கு போடுகிறார்கள்” எனச் சாடியுள்ளார். ​மேலும் பேசிய தங்கம் தென்னரசு, “அதிர்ஷ்டவசமாக தவெக ஆட்சிக்கு வந்துவிட்டாலும் கூட, மக்களுக்கு என்ன செய்ய வேண்டும், நிர்வாகத்தை எப்படி நடத்த வேண்டும் என்ற எந்த ஒரு அடிப்படை திட்டமும், தெளிவும் இன்னும் அவர்களுக்குத் தெரியவில்லை.

வெறும் பிஆர் (PR) மாயைகளை மட்டுமே நம்பி அரசியல் நடத்த முடியாது” என்று காரசாரமாகத் தாக்கியுள்ளார். கோட்டைக்குள் ‘ரீல்ஸ் விவகாரம்’ பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், தங்கம் தென்னரசுவின் இந்த “மாய உலக” விமர்சனம் அரசியல் வட்டாரத்தில் தவெக மற்றும் திமுக இடையே புதிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது.