மராட்டிய மாநிலம் ஜல்கான் மாவட்டத்தில் உள்ள புசாவல் நகரில், வங்காளதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் சுமார் 17 ஆண்டுகளாக சட்டவிரோதமாக மறைந்து வாழ்ந்து வந்த அதிர்ச்சி தகவல் காவல்துறை விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
மேலும் ஃபரிதா பேகம் முகமது கான் என்ற இயற்பெயர் கொண்ட அந்தப் பெண், இந்தியாவில் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள ‘ஜஸ்மின் பீ’ என்ற போலிப் பெயரைப் பயன்படுத்தியுள்ளார். கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் புசாவலில் வசித்து வந்த அவர், இந்தியப் பிரஜையாக மாறுவதற்காக போலி ஆவணங்கள் மூலம் ரேஷன் கார்டு மற்றும் பாஸ்போர்ட் ஆகியவற்றை சட்டவிரோதமாக தயாரித்துள்ளார்.
இதனால் சந்தேகத்தின் அடிப்படையில் புசாவல் நகர போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், அந்தப் பெண்ணின் உண்மை முகமூடி கிழிக்கப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். எந்தவொரு முறையான விசா அல்லது குடியுரிமை ஆவணங்களும் இன்றி, இத்தனை ஆண்டுகள் அவர் காவல்துறையின் கண்ணில் படாமல் தப்பித்து வாழ்ந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் போலி ஆவணங்களைத் தயாரிக்க அவருக்கு உதவியவர்கள் யார் என்பது குறித்தும், இதன் பின்னணியில் உள்ள பிற சட்டவிரோத நெட்வொர்க்குகள் குறித்தும் போலீசார் தற்போது தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
