உலகளவில் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான மெட்டா, தனது செலவுகளைக் குறைத்து செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் அதிக கவனம் செலுத்துவதற்காக, ஒரே நாளில் சுமார் 8,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யத் தொடங்கியுள்ளது. இது நிறுவனத்தின் ஒட்டுமொத்த பணியாளர்களில் கிட்டத்தட்ட 10 சதவீதமாகும். இந்த இக்கட்டான சூழலைத் தவிர்க்கும் பொருட்டு, ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலை செய்யுமாறு மெட்டா நிர்வாகம் முன்னரே அறிவுறுத்தியிருந்தது.
இதனைத் தொடர்ந்து, சிங்கப்பூர் போன்ற ஆசியப் பிராந்தியங்களில் உள்ள ஊழியர்களுக்கு அதிகாலை 4 மணிக்கே பணிநீக்கம் குறித்த மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டன. இந்தத் திடீர் நடவடிக்கை ஊழியர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் மன உளைச்சலையும் ஏற்படுத்தியுள்ளது.
மேலும் முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றின் தாய் நிறுவனமான மெட்டா, பொறியியல் மற்றும் தயாரிப்புத் துறைகளை இலக்காகக் கொண்டே இந்த அதிரடிப் பணிநீக்கத்தை மேற்கொண்டுள்ளது. நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், மெட்டாவை ஒரு ‘முழுமையான AI நிறுவனமாக’ மாற்றுவதை முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளார்.
இதற்காக சுமார் 100 பில்லியன் டாலருக்கும் அதிகமான தொகையை நிறுவனம் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ள நிலையில், நிர்வாகக் கட்டமைப்பைச் சுருக்கவும், சிறிய மற்றும் வேகமான குழுக்களை உருவாக்கவும் இந்த லேஆஃப் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மனிதவள அதிகாரி ஜானெல் கேல் தெரிவித்துள்ளார். மேலும், சுமார் 7,000 ஊழியர்கள் AI சார்ந்த புதிய பிரிவுகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், இந்த ஆண்டின் பிற்பகுதியில் மேலும் சில பணிநீக்கங்கள் வரக்கூடும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
