டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்களுக்கு கூடுதலாக 10 ரூபாய் வாங்குவது ஏன் என்பது குறித்து, டாஸ்மாக் ஊழியர்கள் தங்களின் 23 ஆண்டு கால குமுறல்களையும், கடை நடத்தத் தங்களின் கைக்காசைப் போடும் பகீர் உண்மைகளையும் ஓப்பனாக உடைத்துள்ளனர். “பாட்டிலுக்கு கூடுதலாக வாங்கும் 10 ரூபாய் எங்களின் இதர செலவுகளுக்குத்தான் போகிறது; கடைகளின் கூடுதல் வாடகை, முழுமையாக வராத ஈபி பில், சரக்கு இறக்குபவர்களுக்கான கூலி, அட்டைப் பெட்டி மற்றும் காலி பாட்டில்களைச் சேமித்து வைக்கும் இடத்திற்கான வாடகை என அனைத்தையும் நாங்கள்தான் பார்க்கிறோம்.
காலி பாட்டில்களைப் பிரித்து அடுக்க வெளியிலிருந்து ஆட்களை வைக்க வேண்டியுள்ளது, அவர்களுக்கு நாள் ஒன்றுக்கு 1,000 முதல் 1,500 ரூபாய் வரை நாங்களே சம்பளம் கொடுக்கிறோம்” என்று தங்களின் இடியாப்பச் சிக்கலை விவரித்துள்ளனர். மேலும் தங்களின் வாழ்வாதாரப் போராட்டம் குறித்துப் பேசிய ஊழியர்கள், “வேலையில்லாத் திண்டாட்டத்தால் 23 ஆண்டுகளுக்கு முன்பு படித்த பட்டதாரிகளான நாங்கள் டாஸ்மாக் வேலைக்கு வந்தோம்; அன்று முதல் இன்று வரை வெறும் 12,000 முதல் 15,000 ரூபாய்தான் சம்பளம் வாங்குகிறோம்.
பாட்டிலுக்கு 10 ரூபாய் ஏன் ?
OPENஆக போட்டு உடைத்த டாஸ்மார்க் ஊழியர்! pic.twitter.com/1Uh6ejp2CU— anushiya (@anushiyaxx) May 19, 2026
வருடத்திற்கு 1,000 ரூபாய் உயர்த்தியிருந்தால் கூட இந்நேரம் 30,000 ரூபாய் சம்பளம் வந்திருக்கும், இப்போது குடும்பம், குழந்தைகள் படிப்பு என எத்தனையோ செலவுகள் இருக்கிறது. இந்த அத்தனை செலவுகளையும் அரசே முழுமையாக ஏற்றுக்கொண்டு, எங்களுக்கு முறையான சம்பளத்தை வழங்கினால் நாங்கள் எம்ஆர்பி (MRP) விலைக்கே விற்கத் தயாராக இருக்கிறோம்” என்று ஊழியர்கள் பேசியுள்ள இந்த எமோஷனல் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி, பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
