தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, மக்கள் தேர்ந்தெடுத்த ஒரு நல்ல அரசு அமைய வேண்டும் என்ற நோக்கில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு இடதுசாரி கட்சிகள் வெளியில் இருந்து ஆதரவு அளித்தன.
சட்டமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின் போது அதிமுகவைச் சேர்ந்த சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி தலைமையில் 25 எம்.எல்.ஏ.க்கள் தவெக அரசுக்கு ஆதரவளித்ததால் அதிமுகவில் உட்கட்சி பூசல் வெடித்துள்ளது.
மேலும், அதிமுகவின் ஒரு தரப்புக்கு அமைச்சர் பதவிகள் வழங்கப்பட உள்ளதால் தான் தவெக இன்னும் அமைச்சரவையை விரிவாக்கம் செய்யவில்லை என்ற தகவல்களும் வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
இந்நிலையில் திருத்துறைப்பூண்டியில் செய்தியாளர்களிடம் பேசிய சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம், திமுக மற்றும் அதிமுகவுக்கு எதிராகவே மக்கள் வாக்களித்துள்ளதாகக் குறிப்பிட்டார். எனவே, மக்கள் தீர்ப்புக்கு விரோதமாக அதிமுகவின் ஆதரவைப் பெறுவதோ அல்லது அவர்களுக்கு அமைச்சர் பதவி கொடுப்பதோ விஜய் சொல்லும் நல்லாட்சிக்கு எதிரானது என்று அவர் விமர்சித்தார்.
தவெக அத்தகைய நிலைக்குச் செல்லாது என்று நம்புவதாகவும், ஒருவேளை மீறி அதிமுகவின் ஒரு கோஷ்டியைச் சேர்த்துக்கொண்டு ஆட்சியைத் தொடர தவெக முயன்றால், தவெக அரசுக்கு அளித்து வரும் ஆதரவை சிபிஎம் நிச்சயமாக மறுபரிசீலனை செய்யும் என்றும் அவர் திட்டவட்டமாக எச்சரித்துள்ளார்.
