ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா, தற்போது தனது நிறுவனத்தில் ஒரு புதிய சுற்று அமைப்புசார் மாற்றங்களை மேற்கொண்டு, உலகளாவிய அளவில் சுமார் 10% ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளது. இந்த அதிரடி நடவடிக்கை மூலம் உலகளவில் இந்நிறுவனத்தைச் சேர்ந்த சுமார் 8,000 ஊழியர்கள் தங்களது வேலைகளை இழக்கும் கடுமையான அபாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்த மெகா பணிநீக்கப் பணிகள் வரும் மே 20-ஆம் தேதிக்குப் பிறகு அதிகாரப்பூர்வமாகத் தொடங்குகின்றன. மேலும், இந்த ஆண்டின் பிற்பகுதியிலும் கூடுதல் ஆட்குறைப்புகள் தொடரும் என்றும், நிர்வாகச் செலவுகளைக் குறைக்கும் நோக்கில் பல மேலாண்மைப் பதவிகள் ஒட்டுமொத்தமாக நீக்கப்படும் என்றும் மெட்டா நிர்வாகம் தனது ஊழியர்களிடம் திட்டவட்டமாகத் தெரிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மெட்டா நிறுவனத்தின் இந்த அதிரடி மாற்றத்திற்குப் பின்னணியில், செயற்கை நுண்ணறிவு  பணிப்பாய்வுகளை மேம்படுத்துவதும், நிறுவனத்தின் செயல்திறனை அதிகரித்துச் சிறிய மற்றும் திறமையான குழுக்களை உருவாக்குவதுமே முக்கிய நோக்கமாக உள்ளது.

ஏஐ உதவியுடன் பல பணிகளைத் தானியங்கி முறையில் மிக எளிதாகச் செய்ய முடியும் என்பதால், மனித ஊழியர்களுக்கான தேவை பெருமளவில் குறையும் நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக, கிட்டத்தட்ட 7,000 ஊழியர்களை ஏஐ தொடர்பான புதிய கூட்டு முயற்சிகளுக்கு மாற்றவும் இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்த ஆட்குறைப்பு நடவடிக்கைகள் ஒருபுறம் உறுதிசெய்யப்பட்ட அதே நேரத்தில், மெட்டா நிறுவனம் அமெரிக்காவில் உள்ள தனது ஊழியர்களின் நிறுவன மடிக்கணினிகளில் கட்டாயக் கண்காணிப்பு மென்பொருள் ஒன்றையும் நிறுவி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.