இந்தியச் சமூகத்தில் பெண்களுக்குத் திருமணம் மட்டுமே இறுதி மைல்கல் என்ற பொதுப் புத்தியை உடைத்தெறிந்து, 43 வயதிலும் தனியாக, சுயசார்புடன் வாழ்ந்து வரும் மந்தீப் கவுர் என்ற யோகா ஆசிரியரின் இன்ஸ்டாகிராம் வீடியோ இணையத்தில் பெரும் விவாதத்தையும் வரவேற்பையும் பெற்றுள்ளது. “இந்தியாவில் தனியாக வாழும் 43 வயது (திருமணமாகாத) பெண்” என்ற தலைப்பில் அவர் வெளியிட்டுள்ள வீடியோ, தற்காலப் பெண்கள் தங்களின் சுய அமைதி மற்றும் சுதந்திரத்திற்குத் தரும் முக்கியத்துவத்தைப் பறைசாற்றுவதாக அமைந்துள்ளது.
அந்த வீடியோவில், அதிகாலை 4:45 மணிக்குத் தொடங்கும் மந்தீப்பின் தினசரி அட்டவணை, பார்ப்போரை வியப்பில் ஆழ்த்துகிறது. அதிகாலைத் தியானம், தெரு நாய்களுடனான அன்புப் பகிர்வு, திறந்தவெளி ஸ்டூடியோவில் யோகா வகுப்புகள், ஆரோக்கியமான உணவு தயாரிப்பு, ஜிம்மில் பளு தூக்கும் உடற்பயிற்சி மற்றும் மாலை நேரக் கடற்கரை நடைப்பயணம் எனத் தனது நாளை அவர் மிகவும் நேர்த்தியாகவும் திட்டமிட்டபடியும் அமைத்துள்ளார். தனது கண்ணாடியில் “நானே எனக்குப் போதும்”என்ற வாசகத்தை எழுதி வைத்துள்ள மந்தீப், ஒவ்வொரு செயலையும் மிகுந்த புன்னகையோடும் மன நிறைவோடும் செய்கிறார்.
View this post on Instagram
இந்த வீடியோவை சமூக ஊடகங்களில் பார்த்த லட்சக்கணக்கான நெட்டிசன்கள் மந்தீப் கவுரின் வாழ்க்கை முறைக்குத் தங்களது ஆதரவை அள்ளித் தெளித்து வருகின்றனர். “இந்த வீடியோவை பார்க்கும் போதே அங்குள்ள அமைதியை எங்களால் உணர முடிகிறது” என்றும், “வரும் தசாப்தங்களில் இந்தியப் பெண்களிடையே இந்தத் தனித்துவமான வாழ்க்கை முறை மிகவும் சாதாரணமான ஒன்றாக மாறும்” என்றும் பலரும் தங்களது கருத்துக்களைப் பதிவிட்டு மந்தீப்பின் துணிச்சலான முடிவைப் பாராட்டி வருகின்றனர்.
