இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், ஜாம்பவான் சுழற்பந்து வீச்சாளருமான அனில் கும்ப்ளேயின் மகன் மயாஸ் கும்ப்ளே தனது பொறியியல் படிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்து பட்டதாரி ஆகியுள்ளார். இந்த மகிழ்ச்சியான தருணத்தில், அனில் கும்ப்ளே மற்றும் அவரது மனைவி சேதனா கும்ப்ளே ஆகியோர் தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் உணர்ச்சிப்பூர்வமான பதிவுகளைப் பகிர்ந்துள்ளனர். மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்த அனில் கும்ப்ளேயைப் போன்றே, அவரது மகனும் தற்போது பொறியாளராக மாறியுள்ளார்.

இதனை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட கும்ப்ளே, தனது மனைவியுடனும் மகனுடனும் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, “என் மகனே, உன்னை நினைத்து பெருமை கொள்கிறேன்! உனது தந்தையின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி சாதனை படைத்துள்ளாய், உனக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்” எனப் பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் அனில் கும்ப்ளேயின் மனைவி சேதனா, தன் மகனின் சிறுவயது கனவு நனவானதை நினைத்து உருகியுள்ளார். மயாஸிற்கு மூன்று வயதிருக்கும் போதே தான் வளர்ந்ததும் ஒரு இன்ஜினியர் ஆக வேண்டும் என்ற லட்சியத்துடன் இருந்ததாகவும், ஏழு வயதில் கார்களை வடிவமைக்கும் கனவைக் கொண்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தூக்கமில்லாத பல இரவுகள் மற்றும் கடின உழைப்பிற்குப் பிறகு அவன் தன் இலக்கை அடைந்திருப்பது ஒரு பெற்றோராக தங்களுக்குப் பெருமிதம் அளிப்பதாக நெகிழ்ந்துள்ளார். கிரிக்கெட் மைதானத்தில் சாதித்த கும்ப்ளே, படிப்பிலும் ஒரு இன்ஜினியராக இருக்கும் நிலையில், அவரது மகனும் அதே பாதையைத் தேர்ந்தெடுத்துப் பட்டம் பெற்றிருப்பது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியையும் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.