மகாராஷ்டிர மாநிலம் உள்ளாஸ்நகரில், தனது உண்மையான அடையாளத்தை மறைத்துப் பொய் பெயரில் இந்து பெண் ஒருவரைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டு, பின்னர் அவரை மதமாற்றம் செய்யக் கொடுமைப்படுத்தியதாகக் கூறப்படும் புகாரில் கணவர் உட்பட மூன்று பேரை மத்திய காவல் நிலைய போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட பெண் அளித்துள்ள புகாரின்படி, குற்றம் சாட்டப்பட்ட நபர் தனது பெயரை ‘விஜய் வர்மா’ என்று கூறி அந்தப் பெண்ணுடன் காதல் உறவை ஏற்படுத்திக் கொண்டு திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்குப் பிறகு அந்தப் பெண்ணைப் பீகாருக்கு அழைத்துச் சென்ற கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர், அவரைப் புர்கா மற்றும் ஹிஜாப் அணியுமாறும், மாட்டிறைச்சி சாப்பிடுமாறும் வற்புறுத்தித் தீவிர மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் சித்திரவதை செய்துள்ளனர். மேலும், மாமனார் குடும்பத்தினரால் அந்தப் பெண் மானபங்கப்படுத்த முயன்றதாகவும், இத்தம்பதியருக்கு தற்போது மூன்று குழந்தைகள் உள்ளனர் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், அந்த நபர் இரண்டாவது திருமணம் செய்துகொண்டு, பாதிக்கப்பட்ட பெண்ணை வீட்டை விட்டுத் துரத்தியுள்ளார். இதனால் அந்தப் பெண் தனது தாயார் வீட்டில் தஞ்சமடைந்த போதிலும், அங்கேயும் வந்து கணவர் தரப்பினர் வீட்டை அடித்து உடைத்து மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து இம்ரான் ஷேக், சல்மான் ஷேக் மற்றும் ஒரு மைனர் குற்றவாளி என மூன்று பேரைக் கைது செய்துள்ளனர்.