ராஜஸ்தான் மாநிலம் கைர்தல்-பிவாடி மாவட்டத்தில் உள்ள பிவாடி நகரின் கேப்டன் சவுக் பகுதியில், பெற்ற தாயே தனது 8 மாத பெண் குழந்தைக்குக் கட்டாயப்படுத்தி ஆசிட் புகட்டியுள்ள அதிர்ச்சியூட்டும் கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. காவ்யா என்ற பெயருடைய அந்தப் பிஞ்சு குழந்தை, ஆசிட் குடித்தவுடன் வலி தாங்காமல் அலறியதோடு, அவளது வாய் மற்றும் மூக்குப் பகுதியிலிருந்து ரத்தம் வழியத் தொடங்கியுள்ளது.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், குழந்தையை உடனடியாக பிவாடியில் உள்ள அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவளது உடல்நிலை மிக மோசமடைந்ததைத் தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக அல்வாரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் வன்டிலேட்டர் உதவியுடன் அனுமதிக்கப்பட்டுள்ளாள்.
மேலும் குழந்தையின் தந்தை மோஹித் வேலைக்குச் சென்றிருந்த நேரத்தில் இக்கொடூரம் நிகழ்ந்துள்ளது. ஆரம்பத்தில் இக்குற்றச்சாட்டை மறுத்த தாய், பின்னர் குடும்பத்தினர் காவல் துறையிடம் புகார் அளிக்கப்போவதாக எச்சரித்ததைத் தொடர்ந்து, தான் குழந்தைக்கு ஆசிட் கொடுத்ததை ஒப்புக்கொண்டுள்ளார். குழந்தையின் உள் உறுப்புகள் மற்றும் உணவுக்குழாய் எந்த அளவிற்குப் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் என்பதை எண்டோஸ்கோபி போன்ற சிறப்புப் பரிசோதனைகளுக்குப் பிறகே கூற முடியும் என்றும், குழந்தையின் நிலைமை தற்போதும் மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீமன் மீனா தலைமையிலான போலீஸார் வழக்குப்பதிவு செய்து, தாய் இத்தகைய கொடூரச் செயலில் ஈடுபட்டதற்கான பின்னணி மற்றும் காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
