மத்தியப் பிரதேச மாநிலத் தலைநகர் போபாலில், ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதியின் மருமகள் ட்விஷா சர்மா தூக்கிட்ட நிலையில் மரணமடைந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கை விசாரிக்க காவல்துறை தரப்பில் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டு, தினமும் பல்வேறு புதிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. ட்விஷாவின் பெற்றோர் இது ‘கொலை’ என்று குற்றம் சாட்டி வரும் நிலையில், இந்த விவகாரம் குறித்து முதன்முறையாக ட்விஷாவின் மாமியாரும், ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதியுமான கிரபாலா ஊடகங்களிடம் பேட்டியளித்துள்ளார். அவரது பேட்டியின் விவரம் பின்வருமாறு,

“என் மகன் சமர்த்தும், ட்விஷாவும் ஒருவரையொருவர் காதலித்தனர். எங்கள் இரு குடும்பங்களின் பின்னணியில் பெரும் வித்தியாசம் இருந்தபோதிலும், அவர்களின் விருப்பத்திற்காகவே இந்தத் திருமணத்தை நாங்கள் நடத்தி வைத்தோம். ட்விஷா மிகச் சிறிய வயதிலேயே மாடலிங் மற்றும் கிளாமர் உலகிற்குள் நுழைந்துவிட்டார். அவரது மறைவு எங்களுக்கும் ஒரு பேரிழப்பு தான்.

ட்விஷாவிற்கு மனநலப் பாதிப்புகள் இருந்ததால், டாக்டர் சத்யகாந்த் திரிவேதியிடம் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், அவர் மருந்துகளைச் சரியாக உட்கொள்ளவில்லை. என் மகன் சமர்த் நீதிமன்றத்தில் இருந்தபோது, ட்விஷா அவருக்குத் தொலைபேசியில் அழைத்து, தான் ‘கருக்கலைப்பு மாத்திரைகளை’ உட்கொண்டுவிட்டதாகக் கூறினார். மே 7-ம் தேதி அவர் அந்த மாத்திரைகளை எடுத்தார். குடும்பத்தின் முதல் குழந்தை என்பதால் நாங்கள் ஆவலோடு இருந்தோம், ஆனால் அவர் எங்களுக்கு அந்த மகிழ்ச்சியைக் கொடுக்கவில்லை.

ட்விஷாவின் தந்தை 20 ஆண்டுகள் உஸ்பெகிஸ்தானில் மருந்துத் துறையில்  பணியாற்றியவர். ட்விஷாவிற்கு மாத்திரைகள் எங்கிருந்து கிடைத்தன என்பதற்கான ஆதாரம் அவராகத்தான் இருக்க வேண்டும். ட்விஷா தான் அதிகளவில் கஞ்சா பயன்படுத்தியதாக அவரே ஒப்புக்கொண்டிருக்கிறார். என் மகன் சமர்த் போதைப்பொருள் பயன்படுத்துவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது.

ட்விஷா டெல்லிக்குச் சென்றுவிட்டுத் திரும்பும் போதெல்லாம் அவரது நடத்தை விசித்திரமாக மாறும். ஒருமுறை அவர் செய்த தவறான செயலால் ‘ஊபர்’ (Uber) நிறுவனம் அவரைத் தங்களது சேவையைப் பயன்படுத்த முடியாதபடி கருப்புப் பட்டியலில் வைத்திருந்தது.

என் மகன் ட்விஷாவை உயிருக்குயிராக நேசித்தான். ட்விஷா இறந்த அன்று எய்ம்ஸ் மருத்துவமனையில் என் மகன் காலில் செருப்புகூட இல்லாமல் அழுதுகொண்டே ஓடினார். ஆனால், மருத்துவமனையில் எங்களுக்குச் செல்வாக்கு இருப்பதாகப் பழிசுமத்துகிறார்கள். நாட்டின் எல்லையைக் காத்த ராணுவக் குடும்பம் எங்களது. சட்டத்தின் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. நான் மாவட்ட நீதிபதியாக இருந்ததால் எனக்கு ஜாமீன் கிடைக்கவில்லை, ஒரு சாமானியராக இருந்திருந்தாலும் இந்நேரம் ஜாமீன் கிடைத்திருக்கும். என் மகனுக்கும் விரைவில் ஜாமீன் கிடைக்கும்” என்று அவர் கூறினார்.

கடந்த மே 12 அன்று ட்விஷா சர்மா வீட்டின் மொட்டை மாடி இரும்பு கம்பியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். வரதட்சணை கொடுமை மற்றும் மாமியார் வீட்டின் சித்திரவதை காரணமாகவே அவர் தற்கொலை செய்துகொண்டார் என்று ட்விஷாவின் பெற்றோர் தரப்பில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. வழக்கை நீதிமன்றம் தற்போது விசாரித்து வருகிறது.