மத்தியப் பிரதேச மாநிலத் தலைநகர் போபாலில், ஓய்வுபெற்ற பெண் நீதிபதியின் மருமகளும், திரைப்பட நடிகையுமான ட்விஷா சர்மா தற்கொலை செய்துகொண்ட வழக்கில், அவரது கடைசி வாட்ஸ்அப் சாட் உரையாடல்கள் வெளியாகி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கடந்த மே 12-ம் தேதி வீட்டின் மொட்டை மாடி இரும்பு கம்பியில் தூக்கிட்ட நிலையில் மீட்கப்பட்ட ட்விஷா சர்மா, மரணமடைவதற்கு முன்பு தனது தாயாருக்கு அனுப்பிய வாட்ஸ்அப் செய்திகள் தற்போது வெளியாகியுள்ளன.
அதில் ட்விஷா, “அம்மா நான் கடுமையான மன உளைச்சலில் இருக்கிறேன். இந்த மனிதர்கள் மிகவும் மோசமானவர்கள். என் மீது சந்தேகப்படுகிறார்கள். ‘உன் வயிற்றில் வளரும் குழந்தை யாருடையது?’ என்று என் கணவர் சமர்த் கேட்கிறான். இவர்கள் மிகவும் இரக்கமற்றவர்கள். சமர்த் என்னிடம் சரியாகப் பேசுவது கூட இல்லை. என் வாழ்க்கை நரகமாகிவிட்டது. என்னை எப்படியாவது இங்கிருந்து வந்து கூட்டிச் செல்லுங்கள், இவர்கள் என்னை வாழ விடமாட்டார்கள் எனத் தனது குமுறல்களைப் பதிவிட்டுள்ளார்.
மேலும், தனது தோழி மீனாட்சியிடம் இன்ஸ்டாகிராமில் பேசும்போது, “நான் இதில் மாட்டிக்கொண்டேன், நீ மாட்டிக்கொள்ளாதே” என்றும் ட்விஷா எச்சரித்துள்ளார். இதற்கிடையில், இந்த வழக்கில் தலைமறைவாக இருந்து, கடந்த வெள்ளிக்கிழமை முன்ஜாமீன் பெற்ற ட்விஷாவின் மாமியாரும், ஓய்வுபெற்ற நீதிபதியுமான கிரிபாலா சிங் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் வேறு விதமான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
அவர் தனது மனுவில், “ட்விஷா தெலுங்குத் திரைப்படங்கள் மற்றும் விளம்பரங்களில் நடித்த முன்னாள் நடிகை. அவர் கடுமையான போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையாகி இருந்தார். போதைப்பொருள் கிடைக்காத நேரத்தில் அவரது கைகள் நடுங்கத் தொடங்கும், இதனால் கடுமையான கோபத்திற்கு ஆளாவார். இதனை அவரது தந்தையே எங்களிடம் ஒப்புக்கொண்டுள்ளார். கடந்த ஏப்ரல் 17-ம் தேதி தான் கர்ப்பமாக இருப்பதை அறிந்ததும், அவர் விசித்திரமாக நடந்துகொண்டார். டெல்லிக்குச் செல்வதாகக் கூறிவிட்டு, ஒரு நாள் முழுவதும் எங்கு இருந்தார் என்றே தெரியவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், ட்விஷாவின் பெற்றோர் தங்களது மகள் தற்கொலை செய்துகொள்ளவில்லை, அது ‘கொலை’ என்று திட்டவட்டமாகக் கூறுகின்றனர். “முந்தைய பிரேதப் பரிசோதனையின்போது, ட்விஷாவின் கழுத்தில் இருந்த பெல்ட் காயம் குறித்து எந்தவொரு முறையான ஆய்வும் செய்யப்படவில்லை. எனவே, உண்மையை வெளிக்கொண்டுவர ட்விஷாவின் உடலை மீண்டும் மறு பிரேதப் பரிசோதனை (Re-postmortem) செய்ய வேண்டும்” என இன்று அவர்கள் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யவுள்ளனர்.
இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியான ட்விஷாவின் கணவர் சமர்த் சிங் தொடர்ந்து தலைமறைவாக உள்ள நிலையில், தனிப்படை போலீஸார் அவரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
