ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் பதற்றம் இரண்டு மாதங்களைக் கடந்தும் குறையாத நிலையில், தற்போது உலக நாடுகளை நிலைகுலையச் செய்யும் புதிய மிரட்டல் ஒன்றை ஈரான் விடுத்துள்ளது.
எரிசக்தி விநியோகத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் ‘ஹார்முஸ்’ நீரிணை பகுதியை (Strait of Hormuz) ஏற்கனவே ஈரான் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள நிலையில், இப்போது அதன் பார்வையை கடலுக்கடியில் உள்ள இணையக் கேபிள்கள் (Undersea Internet Cables) பக்கம் திருப்பியுள்ளது.
ஆசியா மற்றும் ஐரோப்பாவை இணைக்கும் மிக முக்கியமான இணையக் கேபிள்கள் ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்வதைக் குறிவைத்து, அவற்றுக்கு வரி விதிக்கப் போவதாக ஈரான் அதிரடியாக அறிவித்துள்ளது.
இந்த இணையக் கேபிள்கள் வழியாகத்தான் உலகின் பெரும்பகுதி டேட்டா பரிமாற்றம் நடைபெறுகிறது. இதைப் பயன்படுத்தி கூகுள், மெட்டா, மைக்ரோசாப்ட் மற்றும் அமேசான் போன்ற முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களிடம் இருந்து பெரும் தொகையைக் கட்டணமாக வசூலிக்க ஈரான் திட்டமிட்டுள்ளது.
ஈரானிய புரட்சிகர ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் இப்ராகிம் ஜோல்ஃபகாரி, “இந்த கேபிள்களைப் பயன்படுத்துவதற்கு டெக் நிறுவனங்கள் கட்டணம் செலுத்த வேண்டும், இல்லையெனில் இணையச் சேவை துண்டிக்கப்படும்” எனச் சமூக வலைதளத்தில் பகிரங்கமாக எச்சரித்துள்ளார்.
ஒருவேளை இந்த கேபிள்கள் சேதப்படுத்தப்பட்டால், உலக அளவில் இணைய வேகம் குறையும் அல்லது முழுமையாகத் துண்டிக்கப்படும் அபாயம் உள்ளது.
இதனால் ஆன்லைன் பேங்கிங் முதல் சர்வதேச வர்த்தகம் வரை அனைத்தும் முடங்கி, பில்லியன் கணக்கான டாலர் இழப்பு ஏற்படும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இப்போதைக்கு டெக் நிறுவனங்களுக்கு ஈரானின் நிபந்தனைகளை ஏற்பதைத் தவிர வேறு வழியில்லை என்றே சொல்லப்படுகிறது.
