தமிழக அரசியல் களத்தில் அதிமுகவுக்குள் ஏற்பட்டுள்ள உட்கட்சிப் பூசல் மற்றும் பிளவு காரணமாக, அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரும் அடுத்தடுத்து தவெகவில் இணைந்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, இன்று (மே 18) திருச்சி அதிமுக மாவட்ட துணைச் செயலாளர் பத்மநாபன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் தவெகவில் தங்களை முறைப்படி இணைத்துக் கொண்டுள்ளனர். தவெக டெல்டா மண்டல பொறுப்பாளர் கு.ப.கிருஷ்ணன் முன்னிலையில் இந்த இணைவு விழா மிக பிரம்மாண்டமாக அரங்கேறியுள்ளது.

​திருச்சி மாவட்ட துணைச் செயலாளர் பத்மநாபன் அவர்களுடன் இணைந்து, ஜங்ஷன் பகுதி செயலாளர் நாகநாதர் பாண்டியன் மற்றும் உறையூர் பகுதி செயலாளர் பூபதி ஆகியோரும் தவெகவில் இணைந்துள்ளனர். சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்டுள்ள தொடர் பிளவுகள் மற்றும் உட்கட்சி சண்டைகளால் அதிருப்தியடைந்த நிர்வாகிகள், மாற்று அரசியல் சக்தியாக உருவெடுத்துள்ள தவெகவை நோக்கி படையெடுத்து வருவது டெல்டா மாவட்ட அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.