டெல்லியில் உள்ள ரோகினி நீதிமன்றத்தில் கூடுதல் செஷன்ஸ் நீதிபதி ராகேஷ் குமார் மற்றும் பார் அசோசியேஷன் தலைவர் ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட கடுமையான வாக்குவாதம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீதிமன்ற விசாரணையின் போது வழக்கறிஞர் தரப்பில் வைக்கப்பட்ட ஒரு கோரிக்கையை நீதிபதி நிராகரித்ததால் இந்த மோதல் வெடித்ததாகக் கூறப்படுகிறது.
இந்த வீடியோவில் இரு தரப்பினரும் ஒருவரையொருவர் காரசாரமாக சாடிக்கொள்வதும், “இதை செய்ய மாட்டேன்…” என்று ஆவேசமாகப் பேசுவதும் பதிவாகியுள்ளது. இந்த சம்பவமானது நீதிமன்றத்தின் கண்ணியம் மற்றும் ஒழுங்குமுறை குறித்த பல கேள்விகளை எழுப்பியுள்ளதுடன், சமூக வலைதளங்களில் பொதுமக்களிடையே விவாதப் பொருளாக மாறியுள்ளது.
View this post on Instagram
“>
இந்த விவகாரம் தீவிரமடைந்ததை அடுத்து, டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. நீதிபதி ராகேஷ் குமாரை ரோகினி நீதிமன்றத்திலிருந்து டெல்லி நீதித்துறை அகாடமிக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளதுடன், அவரின் நீதித்துறை பணிகளையும் தற்காலிகமாகப் பறித்துள்ளது. அவருக்குப் பதிலாக தீரஜ் மிட்டல் புதிய நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையில், நீதிபதியின் இந்த நடத்தைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இது குறித்து முறையான விசாரணை நடத்தக் கோரியும் டெல்லியில் உள்ள அனைத்து மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு நீதிமன்றப் பணிகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட அழைப்பு விடுத்துள்ளது.
