தமிழ், கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் பிரபலமான நடிகை பாவனா ரமன்னா, தனது 40 வயதில் திருமணமின்றி இரட்டை குழந்தைகளுக்குத் தாயான செய்தி சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
தமிழில் ‘அன்புள்ள காதலுக்கு’, ‘ஆஹா எத்தனை அழகு’ போன்ற படங்களில் நடித்த இவர், 20 மற்றும் 30 வயதிற்குட்பட்ட காலங்களில் தாய்மை பற்றி யோசிக்கவில்லை என்றும், 40 வயதில் தாய் ஆக வேண்டும் என்ற ஆசை எழுந்தபோது அந்தப் பயணம் சவால்கள் நிறைந்ததாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
தனியாகக் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பிய இவரைப் பல மருத்துவமனைகள் நிராகரித்த நிலையில், பெங்களூருவைச் சேர்ந்த ஒரு மருத்துவரின் உதவியுடன் IVF முறையில் முதல் முயற்சியிலேயே அவர் கருவுற்றார்.
அவருக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்த நிலையில், எதிர்பாராதவிதமாக ஒரு குழந்தை மட்டுமே உயிர் பிழைத்தது. தற்போது உயிர் பிழைத்த குழந்தைக்கு ‘ருக்மணி’ எனப் பெயரிட்டு, தந்தை இல்லாவிட்டாலும் கலை, இசை மற்றும் அன்பு நிறைந்த சூழலில் அக்குழந்தையை வளர்த்து வருகிறார்.
குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் ஆதரவுடன் துணிச்சலான இந்த முடிவை எடுத்த பாவனா ரமன்னாவுக்குப் பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
