தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான புதிய அமைச்சரவையில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சராக ராஜ்மோகன் நியமிக்கப்பட்டுள்ளதற்கு நடிகர் விஷால் தனது கடும் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார்.

இது தொடர்பாக தனது ‘எக்ஸ்’ (ட்விட்டர்) பக்கத்தில் பதிவிட்டுள்ள விஷால், அமைச்சர்களுக்குத் துறைகளை ஒதுக்கீடு செய்த முதல்வருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டாலும், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சராக ராஜ்மோகனை நியமித்தது தனக்கும் சினிமா துறைக்கும் மிகுந்த ஏமாற்றமளிப்பதாகக் கூறியுள்ளார்.

பல ஆண்டுகளாகத் தீர்க்கப்படாமல் இருக்கும் சினிமாத் துறையின் சிக்கல்களைக் கையாள முறையான அனுபவம் இல்லாத ஒருவரால் எப்படி முடியும் எனக் கேள்வி எழுப்பியுள்ள அவர், தனது பதிவில் மூன்று முக்கியக் கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளார்.

குறிப்பாக, திரைப்பட டிக்கெட் விற்பனையை முழுமையாகக் கணினி மயமாக்கி அரசு முறைப்படுத்த வேண்டும், தமிழக அரசால் விதிக்கப்படும் உள்ளூர் பொழுதுபோக்கு வரியை நீக்க வேண்டும் மற்றும் சிறு பட்ஜெட் படங்களுக்கு வழங்கப்படும் அரசு மானியத் தொகையை அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

கடந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று தவெக தலைவர் விஜய் முதல்வராகப் பதவியேற்றுள்ள சூழலில், அவரின் அமைச்சரவை குறித்து சினிமா பிரபலமே முதல்முறையாக விமர்சனம் செய்திருப்பது அரசியல் மற்றும் திரையுலக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.