நடிகர் விஷால் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் புதிய அமைச்சரவை உருவாக்கப்பட்டு, சட்டமன்ற உறுப்பினர்களுக்குத் துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், சினிமா துறையினரின் கோரிக்கைகளை முதலமைச்சர் மாண்புமிகு ஜோசப் விஜய் அவர்களே நேரடியாகக் கவனித்துத் தீர்வு காண வேண்டும் எனத் தயாரிப்பாளர்கள் மற்றும் திரைத்துறையினர் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.
புதிய அமைச்சரவையில், திரைப்படத் தொழில்நுட்பம் மற்றும் சினிமாடோகிராஃப் சட்டத் துறை அமைச்சராக திரு. ராஜ்மோகன் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். எனினும், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாகத் திரைத்துறையின் அடிமட்டத்திலிருந்து வந்து, அதன் வலியையும் தேவைகளையும் நன்கு அறிந்தவர் முதலமைச்சர் விஜய் என்பதால், அவரே இத்துறைக்கான கோரிக்கைகளை நேரடியாகப் பரிசீலிக்க வேண்டும் எனத் திரைத்துறையினர் விரும்புகின்றனர்.
தற்போது கடுமையான நிதி நெருக்கடியிலும், பல்வேறு சவால்களிலும் சிக்கித் தவிக்கும் தயாரிப்பாளர்களையும், தயாரிப்பு நிறுவனங்களையும் மீட்டெடுக்க முதலமைச்சர் உடனடியாக தலையிட வேண்டும் எனத் தெரிவித்து, திரைத்துறையினர் சார்பில் பின்வரும் 3 முக்கிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன:
1. அரசு இ-டிக்கெட் (e-Ticket) இணையதளம்
பொதுமக்கள் சினிமா டிக்கெட் முன்பதிவு செய்யும்போது வசூலிக்கப்படும் கூடுதல் கட்டணங்களைக் குறைத்து, சாமானிய மக்களுக்குக் நிவாரணம் வழங்கும் வகையில் அரசே பிரத்யேக டிக்கெட் முன்பதிவு இணையதளத்தை அறிமுகப்படுத்த வேண்டும். இதன் மூலம் அரசுக்குக் கூடுதல் வருவாய் கிடைப்பதுடன், ரசிகர்களுக்கும் ஒரு டிக்கெட்டுக்கு 30 ரூபாய் வரை மிச்சமாகும்.
2. உள்ளாட்சி அமைப்புகளுக்கான விநோத வரி (LBT) ரத்து
இந்தியாவிலேயே ‘ஒரே நாடு, ஒரே வரி’ (GST) முறைக்கு முரணாக, சினிமா துறைக்கு மட்டும் இரண்டு வரிகளை (GST மற்றும் உள்ளாட்சி வரி) விதிக்கும் ஒரே மாநிலமாகத் தமிழகம் நீடிக்கிறது. இந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான கூடுதல் வரியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
3. சிறு படங்களுக்கான மானியத்தை உயர்த்துதல்
முதலீட்டைத் திரும்பப் பெற முடியாமல் தவிக்கும் சிறு பட்ஜெட் திரைப்படங்களைக் காப்பாற்ற, ஆண்டுதோறும் அரசு வழங்கும் மானியத் தொகையை தற்போதைய குறைந்தபட்ச அளவிலிருந்து கணிசமாக உயர்த்தி வழங்க வேண்டும். “இது திரு. ராஜ்மோகன் அவர்களின் தகுதியைக் குறைத்து மதிப்பிடுவதற்காக அல்ல. கடந்த 9 ஆண்டுகளுக்கும் மேலாகத் திரைத்துறை விடுத்து வரும் இந்தக் கோரிக்கைகளுக்கு, சினிமா துறையை முழுமையாக அறிந்த முதலமைச்சர் விஜய் அவர்களால் மட்டுமே முறையான தீர்வைக் கொடுக்க முடியும்” என்று திரைத்துறையைச் சேர்ந்த பிரதிநிதிகள் தங்களது ஆதங்கத்தையும் நம்பிக்கையையும் வெளிப்படுத்தியுள்ளனர் என்று பதிவிவிட்டுள்ளார்.
