உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டின் லிசாடி கேட் பகுதியில் சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாட்டைப் பயன்படுத்தி ஏழை எளிய மக்கள் மிகக் கொடூரமாக ஏமாற்றப்படும் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. எரிவாயு சிலிண்டர் கிடைக்காமல் அலைந்து திரிந்த நபர் ஒருவர், வேறு வழியின்றி கள்ளச்சந்தையில் சுமார் 2500 ரூபாய் கொடுத்து அவசரமாக ஒரு சிலிண்டரை வாங்கியுள்ளார்.
ஆனால், அந்த சிலிண்டரை வீட்டிற்கு கொண்டு வந்து அதன் வால்வை திறந்து பார்த்தபோது, அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அந்த சிலிண்டரில் எரிவாயுவிற்குப் பதிலாக முழுமையாகத் தண்ணீர் நிரப்பப்பட்டிருந்தது தெரியவந்தது.
View this post on Instagram
“>
இதனைக் கண்டு ஆத்திரமடைந்த அந்த நபர், சிலிண்டரிலிருந்து தண்ணீர் வெளியேறுவதைக் காட்டும் வீடியோவை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து, மற்ற பொதுமக்களையும் எச்சரித்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருவதோடு, “ஏழைகள் வாழவே கூடாதா?” என்ற கேள்வியோடு பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இதனால் கள்ளச்சந்தையில் சட்டவிரோதமாக தரம் குறைந்த மற்றும் ஏமாற்று வேலைகளுடன் விற்கப்படும் எல்பிஜி சிலிண்டர்கள், ஏழை மக்களின் பணத்தைப் பறிப்பது மட்டுமின்றி, பெரும் பாதுகாப்பு அச்சுறுத்தலையும் ஏற்படுத்துவதால், இதற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
