ஜூன் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட உள்ள நிலையில், தமிழக பெற்றோர் மற்றும் மாணவர்களுக்குப் பேரிடியாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது. மாபெரும் கட்டாயக் கட்டணக் கொள்ளை மற்றும் முறைகேடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பள்ளித் தொடக்க நாளில் சுமார் 1 லட்சம் தனியார் பள்ளி வாகனங்களை இயக்கப் போவதில்லை என தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கம் அதிரடியாக அறிவித்துள்ளது.

​சந்தையில் வெறும் 3,000 ரூபாய் மட்டுமே மதிப்புள்ள GPRS கருவிகளை, சுமார் 18,000 ரூபாய் கொடுத்து கட்டாயம் வாங்க வேண்டும் என தங்களை அதிகாரிகள் நிர்பந்திப்பதாகப் பள்ளிகள் சங்கம் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளது. இதுமட்டுமன்றி, பள்ளி வாகனங்களுக்கான தகுதிச் சான்றிதழ் (FC) வழங்குவதிலும் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடப்பதாகக் கூறி இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை அவர்கள் அறிவித்துள்ளனர். பள்ளி திறக்கும் முதல் நாளே வாகனங்கள் ஓடாது என்ற இந்த அறிவிப்பு, தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.