இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு சுமார் 3 ரூபாய் வரை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, ஸ்விக்கி, சொமாட்டோ மற்றும் பிளிங்கிட் போன்ற செயலிகளை நம்பியிருக்கும் கிக் (Gig) மற்றும் தற்காலிக விநியோகப் பணியாளர்கள் கடுமையான நிதி நெருக்கடியைச் சந்தித்துள்ளனர்.
இந்த திடீர் எரிபொருள் விலை உயர்வால் தங்களின் அன்றாட வருமானம் கடுமையாகப் பாதிக்கப்படுவதாகக் குற்றம்சாட்டி, கிக் மற்றும் பிளாட்ஃபார்ம் சேவைத் தொழிலாளர் சங்கம் (GIPSWU) நாடு தழுவிய அளவில் இன்று (மே 16) மதியம் 12:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை 5 மணி நேர அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அதிரடி அழைப்பு விடுத்துள்ளது.
ஒரு கிலோமீட்டருக்கான விநியோகக் கட்டணத்தை (Delivery Charges) உடனடியாக உயர்த்த வேண்டும் என்று நிறுவனங்களுக்குக் கோரிக்கை விடுத்துள்ள இந்த போராட்டத்தால், இன்று மதியம் உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் விநியோகச் சேவைகளில் கடுமையான தாமதம் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
சர்வதேச கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமே இந்த பெட்ரோல் விலை உயர்வுக்குக் காரணம் என்று கூறப்படும் நிலையில், மோட்டார் சைக்கிள்களை நம்பியிருக்கும் சுமார் 1.2 கோடி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைக் காக்க நிறுவனங்கள் உடனடியாகப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.
