மத்தியப் பிரதேச மாநிலம் சியோபூர் பகுதியில், கோடை வெயிலுக்குக் குளிர்ச்சியாக இருக்கும் எனத் தர்பூசணிப் பழம் சாப்பிட்ட குடும்பத்தில் நேர்ந்த கொடூரம் ஒட்டுமொத்தப் பகுதியையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஷாஜாபூர் மாவட்டத்தைச் சேர்ந்த இந்திர குமார் பரிஹார் (43) மற்றும் அவரது 21 வயது மகன் வினோத் ஆகிய இருவருக்கும் கடந்த வியாழக்கிழமை இரவு லேசான உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால், நெஞ்செரிச்சலில் இருந்து நிவாரணம் பெற நினைத்து, வெள்ளிக்கிழமை காலை அவர்கள் வீட்டில் இருந்த தர்பூசணிப் பழத்தை வெட்டிச் சாப்பிட்டுள்ளனர்.

பழத்தைச் சாப்பிட்ட சில நிமிடங்களிலேயே இருவரின் உடல்நிலையும் மோசமடைந்து, வாந்தி மற்றும் கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டுள்ளனர். நிலைமை தீவிரமடைந்ததை அடுத்து, இருவரும் சியோபூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அங்கு இந்திர குமாரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருந்ததால் மேல் சிகிச்சைக்காகக் கோட்டா நகருக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மகன் வினோத் தற்போது மருத்துவமனையில் உயிருக்கானப் போராட்டத்துடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தர்பூசணிப் பழத்தில் ஏதேனும் நச்சு இரசாயனங்கள் கலந்திருக்குமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ள நிலையில், இது உணவு நச்சுத்தன்மையால் ஏற்பட்ட குடல் தொற்று பாதிப்பாக இருக்கலாம் என மருத்துவர்கள் சந்தேகிக்கின்றனர். எனினும், பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகே மரணத்திற்கான உண்மையான காரணம் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.