நடிகர் சூர்யா நடிப்பில் உருவான ‘கருப்பு’ திரைப்படம் மே 14-ஆம் தேதி வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், படத்தின் காலை மற்றும் மதிய காட்சிகள் திடீரென ரத்து செய்யப்பட்டது சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் திரைப்படத்தின் சிறப்புக் காட்சிகளுக்காக நள்ளிரவு 2 மணி வரை திரையிட்டுக் கொள்ளலாம் என முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசு ஏற்கனவே அனுமதி அளித்திருந்தது.

பட ரிலீஸில் ஏற்பட்ட சில சிக்கல்களால் காலைக் காட்சிகள் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, படத்தின் தயாரிப்பாளர் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டு எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

மேலும், இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜியும் கண்ணீருடன் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டு, படம் கண்டிப்பாக மாலை 6 மணிக்கு வெளியாகும் என்ற நம்பிக்கையைத் தெரிவித்துள்ளார்.

சினிமா உலகில் இந்தச் சலசலப்பு ஒருபுறம் ஓடிக்கொண்டிருக்க, மறுபுறம் இணையவாசிகள் மற்றும் விஜய் ரசிகர்கள் சிலர் நடிகர் சூர்யாவிற்கு ஒரு விசித்திரமான கோரிக்கையை விடுத்து வருகின்றனர்.

நீண்ட கால நண்பர்களான முதலமைச்சர் விஜய் மற்றும் சூர்யா ஆகியோரின் நட்பைக் குறிப்பிட்டு, “சூர்யா அண்ணா, இந்த சினிமா தயாரிப்பாளர்களை நம்புவது வீண், நீங்கள் முதலமைச்சர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து விடுங்கள்; உங்களுக்குத் திருச்சி கிழக்குத் தொகுதி வேட்பாளர் வாய்ப்பைத் தருகிறோம்” என்று சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

அதே நேரத்தில், விஜய்யின் நெருங்கிய நண்பரான நடிகர் ஸ்ரீமனும் சூர்யாவின் படக்குழுவிற்கு ஆதரவாக, “கடந்த சில நாட்களாக நடந்த கசப்பான சம்பவங்களை மறந்துவிடுங்கள், சூர்யா பிரதரின் உழைப்பிற்குப் படம் கண்டிப்பாகப் பட்டையைக் கிளப்பும்” என்று பாசிட்டிவாகப் பதிவிட்டு ஆறுதல் கூறியுள்ளார்.